புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுரை
மத்திய அரசிடம் இருந்து நிதியைப்பெற புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி இணைய தளம் மூலமாக கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
உள்ளாட்சி தேர்தல்புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இது அரசை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. எனது கவலையை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரி கிராமங்களுக்கான உரிமை கிராம பஞ்சாயத்துகள் மூலம் கிடைக்கிறது. குறைவான ஊழியர்கள் மற்றும் நிதி ஆதாரங்களும் இல்லாததால் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கிராமங்களை புறக்கணித்து வருகின்றனர்.
கிராம மக்களுக்கு பொறுப்புகளை வழங்கி, கிராமங்களின் வளர்ச்சிக்கு அவர்களையும் பங்கேற்கச்செய்ய வேண்டும். இதை செய்யாமல் மணல் கடத்தலை தடுப்பது, நீரை சேமிப்பது, திறன் மேம்பாடு, பள்ளிக்கல்வி மேம்பாடு, மரம் நடும் பணி, இளைஞர் மேம்பாடு போன்ற பணிகள் எப்படி நடக்கும்?
நிதியை சுலபமாக பெற முடியும்பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதற்கு உள்ள தொழில்நுட்ப தடைகளை அகற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் புதுச்சேரி நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். இது கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்திற்கு குடி பெயர்வதையும், விவசாயத்தையும் காப்பாற்றும். கிராம பஞ்சாயத்துகளில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டும்.
இதன் மூலம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படும். அதிகாரங்கள் பிரித்து கொடுக்கப்படும். நீராதாரங்களை தூய்மைப்படுத்தும் பணி, அதன் பயன்களை பெறும் மக்கள் கையில் இருக்க வேண்டும். இது விமர்சனம் இல்லை. இது புதுச்சேரி மீதுள்ள கவலை. புதுச்சேரி அனைத்து வகையிலும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித்தேர்தலை ஒரு காலக்கெடுவிற்குள் நடத்தி முடிக்க முடியும். கிராம பஞ்சாயத்து அமைப்பு இருந்தால்தான் மத்திய அரசிடம் இருந்து நிதியை சுலபமாக பெற முடியும். இல்லையென்றால் மத்திய அரசிடம் இருந்து நிதி மறுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.