புன்னகை முகமும்.. புதிய சிந்தனைகளும்..


புன்னகை முகமும்.. புதிய சிந்தனைகளும்..
x
தினத்தந்தி 13 Aug 2017 12:32 PM IST (Updated: 13 Aug 2017 12:32 PM IST)
t-max-icont-min-icon

இன்று ஒவ்வொரு பெண்ணும் திறமைமிகுந்தவர்களாக இருக் கிறார்கள். இளம் பெண்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் தயக்கமின்றி அதில் இறங்கிவிடவேண்டும்.

ன்று ஒவ்வொரு பெண்ணும் திறமைமிகுந்தவர்களாக இருக் கிறார்கள். இளம் பெண்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் தயக்கமின்றி அதில் இறங்கிவிடவேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கோணத்தில் சிந்திக்கக்கூடாது. சரியான துறையில் இறங்கி, முறையாக அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டால், லட்சியத்தை எளிதாக அடைந்துவிடலாம்.

“இந்த உலகம் மிக அழகானது. அன்பானது. பன் முகத்தன்மையும், பல்வேறு பிரிவுகளும் கொண்டது நாம் வாழும் இந்த உலகம். இங்கு பெண்களுக்கென்று பொறுப்புகளும், கடமைகளும் நிறைய இருக்கின்றன. அடுத்தவர்கள் மீது அக்கறைகொள்வது பெண்களின் இயற்கைக் குணம். பெண்கள் தங்கள் மதிப்பை உணர்ந்து, பெண்மையை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஏற்ற சரியான காலகட்டம் இது. பெண்கள் அநீதிகளுக்கு கட்டுப்படாமலும், அச்சப்படாமலும் நடக்கவேண்டும். அது பெண்களின் தலையாய கடமை. பெண்கள் பொருளாதாரரீதியாக சுதந்திரமாகவும், சொந்தக்காலில் நின்று வாழ்க்கை நடத்துபவர்களாகவும் இருப்பது அவசியம். சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு மற்றும் அரசியல் களத்தில் பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். சக மனிதர் களுக்கும், இதர பெண்களுக்கும் அவர்கள் உதவி செய்து, ஆதரவுகாட்ட வேண்டும். பெண்கள் சுயஅதிகாரம் பெறுவதற்கான சூழலை உருவாக்கித் தருவது ஆண்களின் பொறுப்பு. தந்தை, சகோதரன், கணவர், நண்பர் போன்றவர்கள் எல்லாம் அந்த தார்மீக கடமையை நிறைவேற்றவேண்டும்” என்று, ஆண்களின் பொறுப்பையும், பெண்களின் கடமையையும் சுட்டிக்காட்டுகிறார், நந்தினி ஆர்.நாயர்.

இவர் ‘இந்திய வருவாய்ப் பணி’(ஐ.ஆர்.எஸ்) அதிகாரி. சென்னையில் வருமான வரித்துறை துணை ஆணையராக பணியாற்றுகிறார். கொச்சியை சேர்ந்த நந்தினி பன்முகத்திறமை வாய்ந்தவர். ஓவியம், நாட்டியம், நாடகம், எழுத்து, பேச்சு போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர். ஓவியத்தில் தேசிய அளவில் பரிசு பெற்றவர். பொருளாதார கல்வியிலும், ஐ.ஆர்.எஸ். பயிற்சி முகாமிலும் தங்கப்பதக்கம் பெற்றவர்.

பொதுவாக கல்வியில் ஆர்வமுள்ள பெண்களிடம் கலைத்திறன் மெச்சும்படி இருக்காது. கலையில் அவர்கள் ஆர்வம் கொண்டிருந்தால் கல்வியில் ஜொலிக்கமாட்டார்கள். ஆனால் நந்தினி ஐ.ஆர்.எஸ். கல்வி, கலை இரண்டிலும் பிரகாசிப்பவர்.

“நான் கல்வி, கலை இரண்டையும் சிறுவயதில் இருந்தே இரு கண்களைப்போல் பாவித்தேன். அதற்கு என் பெற்றோரும், நான் வளர்ந்த சூழலும்தான் காரணம். சிறுவயதிலே என்னிடம் ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. அதை கண்டுபிடித்து என் பெற்றோர் ஊக்குவித்தார்கள். அதனால் பத்து வயதில் இருந்தே ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றேன்.

கொச்சியில் நாங்கள் வசித்த பகுதியில் பேராசிரியர் ஒருவர் ‘மழைவில்’ என்ற குழுவை உருவாக்கி சிறுவர், சிறுமியர் களுக்கு நாடகத்துறை சார்ந்த பயிற்சி அளித்தார். நான் 13 வயதிலே அதில் சேர்ந்தேன். அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அதன் மூலம் சிறுவயதிலே மேடை பயம் நீங்கியது. சமூகத்தை பற்றிய புரிதலும் உருவானது. கற்பனைத்திறனும் மேம்பட்டது” என்கிறார், நந்தினி.

இவரது பெற்றோர்: ரகு- விஜயலட்சுமி. தம்பி விஜய்.

இன்றைய சமூகத்தில் பெண் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படவேண்டும் என்பதற்கு, இவரது பெற்றோர் எடுத்துக்காட்டாக இருந்து இவரை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள். அதை பெருமையாக நினைவுகூர்கிறார், நந்தினி.

“பெற்றோர் எனக்கு சிறுவயதிலே சுதந்திரத்தை கொடுத்தார்கள். பொறுப்புணர்வுமிக்கவளாகவும் வளர்த்தார்கள். பத்து வயதிலே என்னிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேசி, கருத்து கேட்டார்கள். அப்போது நான் ஒரு சிறுமி என்பதை மறந்து, சிந்தித்து பேசவேண்டியதிருந்தது. அதன் மூலம் என்னிடம் முடிவெடுக்கும் திறன் வளர்ந்தது. 14 வயதினிலே தோழிகளோடு சேர்ந்து என்னை பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் என்னை நானே புரிந்துகொண்டு, தெளிவாக செயல்படும் வாய்ப்பு கிடைத்தது. தன்னம்பிக்கையும் வளர்ந்தது. சூழ்நிலைக்கு தக்கபடி பழகிக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன். எனக்கு என் பெற்றோர் சரியான முறையில் வழிகாட்டியதால், நான் கலை, கல்வி, சமூகத்துடனான தொடர்பு போன்றவைகளில் என் திறமையை நன்றாக வளர்த்துக்கொண்டேன்” என்று கூறும் நந்தினிக்கு 28 வயது.

கொச்சியில் இவர் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, கல்லூரி படிப்பிற்கு பொருளாதார பாடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அங்குள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் முதலிடம் பெற்றுவிட்டு, பொருளாதார முதுகலை கல்விக்காக சென்னை வந்து, லயோலா கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். முதுநிலை கல்வியிலும் தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது.

“நான் எங்கு படித்தாலும், கல்வியோடு சேர்த்து என் தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்வேன். பள்ளியில் படிக்கும்போதே நாடகத்துறையில் தேர்ச்சி பெற்றிருந்ததால் ‘த கோப் அன்ட் ஆன்தம்’ என்ற ஆங்கில நாடகத்தை உருவாக்கி, பள்ளியில் அரங்கேற்றினோம். பின்பு அதை வெளியிடங்களிலும் திரையிட்டோம். அதை நான் இயக்கினேன். தண்ணீர் பிரச்சினையை வெளிப்படுத்தும் நாடகம் ஒன்றில் மேதாபட்கர் போன்று சமூக சேவகியாக தோன்றி நடித்திருக்கவும் செய்திருக்கிறேன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது யுனெஸ்கோவும், இங்குள்ள அமைப்புகளும் சேர்ந்து நடத்திய நாடகத்திருவிழாவிலும் பங்குபெற்றேன். கேரளாவில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நாடக கலையின் மேம்பட்ட பயிற்சிக்காக மத்திய அரசின் ‘காலர்ஷிப்’பும் எனக்கு கிடைத்தது” என்று கூறும் நந்தினியிடம் இப்போதும் கலைத்தாகம் இருந்துகொண்டிருக் கிறது.

பள்ளிப்பருவத்திலே பல வண்ண ஓவியங்கள் தீட்டி பரிசுகளை குவித்த இவர், கல்லூரி காலத்தில் இந்திய அளவில் சிறந்து விளங்கியிருக்கிறார். பி.ஏ. முதலாம் ஆண்டில் பல்கலைக்கழக இளைஞர் கலைவிழாவில், தென்னிந்திய அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றிருக்கிறார். தேசிய அளவிலான போட்டியில் இவரது ஓவியத்திற்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது.

பள்ளிப் பருவத்தில் இருந்தே இவருக்கு ‘இந்திய சிவில் சர்வீசஸ்’ தேர்வு எழுதி, உயர்ந்த பதவிக்கு சென்று, நாட்டுக்கு தன்னால் முடிந்த சேவையை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதனால்தான் இவர் பொருளாதார பாடத்தை தேர்ந்தெடுத்து படித்திருக்கிறார்.

“சமூகத்திற்கு என்னால் முடிந்த பணியை திறம்பட செய்யவேண்டும் என்பதற்காக மத்திய அரசு பணியாளர்களுக்கான தேர்வு எழுத விரும்பினேன். அதற்காக திருவனந்தபுரம் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். 2012-ல் தேர்வு எழுதினேன். அகில இந்திய அளவில் 389-வது இடம் கிடைத்தது. ஐ.ஆர்.எஸ். பணியை தேர்வு செய்தேன். பின்பு நாக்பூரில் ஒன்றரை வருடம் பயிற்சி கொடுத்தனர். அந்த பயிற்சி என்னிடம் இருந்த திறமைகளை மெருகேற்றியது. அப்போது இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். முறையான பயிற்சிகளை பெற்ற பின்பு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தேன்” என்று கூறும் நந்தினிக்கு, ஐ.ஆர்.எஸ். ஆன அடுத்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவரது கணவர் விஷ்ணு வேணுகோபால் ஐ.ஏ.எஸ். இந்த பெயரை கூறும்போதே, பளிச்சென்று ஒரு சம்பவம் நினைவுக்கு வரும்.

பி.டெக். படித்துவிட்டு, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை பெற்று, அமெரிக்கா சென்று கை நிறைய சம்பாதித்த இவர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தியா திரும்பி, தேர்வு எழுதி நினைத்ததுபோல் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தவர்.

துடிப்பான ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சேரன்மகாதேவியில் சப்-கலெக்டராக பணியாற்றியபோது மந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமம் ஒன்று தண்ணீர், மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. அங்குள்ள ஏழை இளைஞர் களின் வேண்டுகோளுக் கிணங்க, அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து அதிரடியாக செயல்பட்டு அந்த கிராமத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்திருக்கிறார். இவரால் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்சார வசதியை பெற்ற அப்பகுதி மக்கள், அந்த ஊருக்கு ‘விஷ்ணு நகர்’ என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார்கள். இதன் மூலம் மக்கள் மனதில் விஷ்ணு ஐ.ஏ.எஸ். இடம் பிடித்துவிட்டார். இவர் தற்போது சென்னை குடிநீர் துறையில் செயல் இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த தம்பதியினர் சென்னையிலுள்ள வருமானவரி துறை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வசிக்கிறார் கள்.

சமூக சேவை பற்றி நந்தினியிடம் கேட்டால், “நாம் சாலையில் இறங்கி சேவை செய்வது மட்டும் சமூகசேவை அல்ல. அரசுப் பணியில் இருந்து மக்களுக்கு ஒழுங்காக சேவை ஆற்றுவதும் சமூக சேவைதான். நமது நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு பொருளாதாரம்தான். நாட்டின் பொருளாதாரத்தை சரியான வழியில் கண்டுபிடித்து, மேம்படுத்தும் துறையில் எங்களை போன்றவர்கள் பணியாற்று கிறோம். இதுவும் சிறந்த சமூக சேவைதான்” என்கிறார்.

இன்றைய இளந்தலைமுறையினர் பற்றி இவரிடம் பேசியபோது, வித்தியாசமான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

“நடுத்தர வயதினர் சிலர், தங்கள் தலைமுறை அப்படி இருந்தது.. இப்படி இருந்தது.. இன்றைய தலைமுறை அப்படியில்லை என்பதுபோல் பேசுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த தலைமுறை, கடந்த தலைமுறையைவிட மேம்பட்டதாகவே இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் தலை சிறந்துவிளங்குகிறார்கள். தங்கள் திறமையை பலவிதங்களில் மேம்படுத்திக்கொள்கிறார்கள். அவரவர் வாழ்க்கையை அவர்களே அற்புதமாக உருவாக்கிக்கொள்கிறார்கள். என் தம்பி சினிமாட்டோகிராபி துறையை தேர்ந்தெடுத்தான். அதில் அவன் தனது தொழில் சார்ந்த புது உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறான். அதுபோல் இன்று ஒவ்வொரு பெண்ணும் திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். இளம் பெண்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் தயக்கமின்றி அதில் இறங்கிவிடவேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கோணத்தில் சிந்திக்கக்கூடாது. சரியான துறையில் இறங்கி, முறையாக அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டால், லட்சியத்தை எளிதாக அடைந்துவிடலாம்” என்று நம்பிக்கையூட்டுகிறார், நந்தினி ஐ.ஆர்.எஸ்.

கலையில் ஆர்வம் இருப்பதுபோல் இவருக்கு சாகசத்திலும் ஆர்வம் இருக்கிறது. தற்போது தனது பொறுப்பு மிகுந்த பணிக்கு மத்தியிலும் இவர், கேரளாவில் இருந்து வரும் குரு பத்மஸ்ரீ கலாமண்டலம் ஷேமாவதியிடம் மோகினி ஆட்டம் கற்றுக்கொண்டிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போது கணவருடன் நெல்லை சென்று மலையேற்றப் பயிற்சியிலும் ஈடுபடுகிறார். ஜோடியாக இவர்கள் உலகின் மிக உயர்ந்த நிலப்பகுதியான ‘லே’க்கும் சென்று வந்திருக்கிறார்கள்.

Next Story