சாலையில் சினேகா


சாலையில் சினேகா
x
தினத்தந்தி 13 Aug 2017 1:08 PM IST (Updated: 13 Aug 2017 1:08 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி படிப்போடு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் விதைப்பதை முக்கிய கடமையாக செய்து கொண்டிருக்கிறார், சினேகா மஹிஜானி.

ள்ளி படிப்போடு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் விதைப்பதை முக்கிய கடமையாக செய்து கொண்டிருக்கிறார், சினேகா மஹிஜானி. 16 வயதான இவர் ஐந்து ஆண்டுகளாக சாலையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்திய வம்சாவளியான இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து நொய்டாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்திருக்கிறார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக வந்தவர், வழியில் வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மதிக்காமல் சீறி பாய்ந்ததையும், பொதுமக்கள் தாறுமாறாக சாலைகளை கடந்து செல்வதையும் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார். அமெரிக்காவை ஒப்பிடும்போது இங்கு சாலை பயணம் முற்றிலும் மாறுபட்டதாக தெரிந்திருக்கிறது.

“அமெரிக்காவில் வாகனம் ஓட்டுவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அங்கு நாங்கள் அடிக்கடி சாலை பயணங்கள் மேற்கொள்வோம். இந்தியாவுக்கு வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வாகனம் ஓட்டுவதற்கே எனது குடும்பத்தினர் தயங்குகிறார்கள். எனக்கும் பயணம் செய்வதற்கு பயமாக இருந்தது. இங்கு யாரும் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை” என்று ஆதங்கப்படுகிறார்.

சினேகா சாலை விதிகள் பற்றியும், அதனை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் தன்னுடைய இணையதளம் மூலம் விழிப்புணர்வு விஷயங்களை பதிவு செய்து வருகிறார். தனது பெற்றோருடன் வார இறுதி நாட்களில் சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டுனர்களிடம் சாலை விதிமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து பேசுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

“இந்தியாவில் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 5 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அமெரிக்கா, நார்வே, ஜெர்மனி, இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் சாலை பாதுகாப்பிற்கான விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுகிறார்கள். அதற்காக தனி குழுவினர் தீவிரமாக களப்பணியாற்றுகிறார்கள். அதனால் அங்கு இறப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் இருப்பது விபத்து எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்தாலும், விதிமுறைகளை மீறுவதே இழப்புக்கு முதன்மை காரணமாக இருக்கிறது” என்கிறார்.

சினேகா சக மாணவர்களுடன் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்களிலும் பங்கேற்று வருகிறார். அடுத்தகட்டமாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்று புதிதாக டிரைவிங் லைசென்ஸ் பெறுபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

“வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தில்தான் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்கள். தாங்கள் வாகனம் ஓட்டும் விதம் மற்றவர்களுக்கு இடையூறை ஏற்படுத்துகிறதா? என்பதை பற்றி சிந்திப்பதில்லை. சாலைகளில் நின்று கொண்டு வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களிடம் பேசுவதை விட, புதிதாக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களிடம் பேசுவதற்கு உத்தேசித்திருக்கிறோம். ஆரம்ப கட்டத்திலேயே அவர்களுக்கு அடிப்படை விஷயங்கள் பற்றிய விழிப்புணர்வை கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார்.

Next Story