செய்தி தரும் சேதி 28. பயணங்கள் பலவிதம்


செய்தி தரும் சேதி 28. பயணங்கள் பலவிதம்
x
தினத்தந்தி 13 Aug 2017 1:28 PM IST (Updated: 13 Aug 2017 1:28 PM IST)
t-max-icont-min-icon

நாங்கள் இருந்த பகுதிக்கு அருகில் சூரமங்கலத்தில் சேலம் சந்திப்பு இருந்தது.

நாங்கள் இருந்த பகுதிக்கு அருகில் சூரமங்கலத்தில் சேலம் சந்திப்பு இருந்தது.

காற்று கசங்காத, நகர்மயம் கழுத்தை நெரிக்காத, புகைமண்டலம் திட்டுத்திட்டாய் படியாத அந்தக்காலத்தில் நாங்கள் வகுப்பிலிருக்கும்போதே புறப்படுகிற புகைவண்டிகளின் ஊதலோசை காதைத் தட்டும். உடன் படிக்கும் மாணவர்கள் ரெயில்வே ஊழியர்களின் வாரிசுகளென்பதால் மாலையில் ரெயில்வே திடலில் விளையாட அவர் களோடு உடன்படிக்கை உண்டு.

விடுமுறையில் நாங்கள் ரெயில் நிலையத்திற்குச் சென்று காற்று வாங்குவதுண்டு. படர்ந்திருக்கும் பச்சைப் புல்வெளிகளின் நடுவே தொல்பொருள்போல் கம்பீரமாய் வீற்றிருக்கும் மரப்பலகைகளில் மணிக்கணக்காக அமர்ந்து நேரம் போவதே தெரியாமல் பேசித் தீர்ப்போம்.

சில இருக்கைகளில், வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வந்து அமரும் முதியவர்கள், வசந்தத்தைப் பேசி நிகழ்காலக் கசப்பை நினைவுகளின் இனிப்பால் நீக்கிக்கொண்டிருப்பார்கள். வழக்கமாய் அவர்கள் அமரும் பலகை வெறுமையாய் இருந்தால் காலம் அவர்களை நாட்காட்டியிலிருந்து கிழித்துவிட்டது என யூகித்திருப்போம்.

ஒவ்வொரு தொடர்வண்டியிலும் எத்தனை விதமான மனிதர்கள் பயணம் செய்கிறார்கள். மரணத்தருவாயில் இருக்கும் தந்தையைக் காண ஒருவர் செல்லும் அதே வண்டியில், மணமகளாய் வருபவளை தேர்ந்தெடுக்க பயணம் செய்பவரும் இருக்கிறார். பணி ஓய்வு பெற்று ஊருக்குத் திரும்புகிறவர்கள் இருக்கும் அதே ரெயிலில், பணியில் சேரும் ஆணையோடு பயணிப்பவர்களும் இருக்கிறார் கள்.

விடுமுறையில் குடும்பத்தைக் காண சொந்த ஊர் வருகிறவர்கள் இருக்கும் அதே பெட்டியில், விடுதியில் இருக்கும் மகளைக் காண விடுமுறையைத் தியாகம் செய்து பயணிக்கின்ற பெற்றோர் இருக்கின்றார்கள். சவத்தைப் பார்க்கச் செல்பவர்கள் உள்ள அதே வண்டியில், பிரசவத்தைப் பார்க்க பிரவேசிப்பவர்களும் உண்டு.

எங்கு போவது என்பதே தெரியாமல் பயணச்சீட்டு இல்லாமல் வண்டி ஏறுபவர்களும் உண்டு. தூங்கி, இறங்க வேண்டிய இடத்தைத் தவற விடுபவர்களும் உண்டு. புது இடங்களைப் பார்த்து புதுப்பித்துக்கொள்வதற்கு உல்லாசப் பயணம் மேற்கொள்பவர்களும் உண்டு.

இருக்கிற வீட்டை இழந்து சோகம் கப்பி ஆதரவுக்கரம் தேடி மகன் வீட்டுக்குத் தயக்கத்துடன் செல்பவரும் உண்டு. முதல் மகன் நிராகரித்ததும் இரண்டாவது மகனாவது ஏற்றுக்கொள்வான் என்ற நப்பாசையில் நடக்கும் பயணங் களும் உண்டு.

சொந்த ஊரில் வசதி இல்லாததால் பட்டணத்தில் வைத்தியம் பார்க்க பெட்டி படுக்கையோடு செல்பவரும் உண்டு. ஒவ்வொரு ரெயிலும் சின்ன பாரதம். அதில் அத்தனை மாநிலமும், மொழியும், நம்பிக்கையும் உள்ளவர்கள் பயணிக் கிறார்கள்.

இப்போதெல்லாம் ரெயில் நிலையங்களில் மர பெஞ்சுகள் காலியாக இருக்கின்றன. தொடர்களைப் பார்க்கும் தலைமுறை தொடர்வண்டியைப் பார்க்கத் தயாராக இல்லை.

எல்லாப் பயணங்களும் மனிதனைப் பரிமளிக்கச் செய்வதில்லை. விமானத்தில் செய்கிற பயணத்திற்கும், கால் நடையாகச் செய்யும் பயணத்திற்கும் வித்தியாசம் உண்டு. நம்பிக்கை நாரால் பின்னப்பட்டு சில யாத்திரைகளை நடந்து மேற்கொள்வது உண்டு. பழனிக்கும், வேளாங்கண்ணிக்கும் பாத யாத்திரைகளைப் பார்த்ததுண்டு.

விமானப் பயணங்களில் ஊர்களைப் பார்க்க முடியாது. அதில் பயணம் செல்பவர்களிடம் எதுவும் பேசவும் முடியாது. சிலர் அந்த விமானமே அவர்களுக்குச் சொந்தமானதைப்போலவும், நாம் இலவசமாக வருவதைப்போலவும் நடந்துகொள்வார்கள். இன்னும் சிலரோ வேற்று கிரகவாசிகள்போல நம்மைப் பார்ப்பார்கள். சிலர் நம்மைப் பார்க்காமல் நம்முள் பார்ப்பார்கள். அங்கு கற்றுக்கொள்ள எதுவுமில்லை, பெற்றுக்கொள்ள யாருமில்லை.

மகிழுந்துப் பயணம் நிகழ்த்தும்போது நாமே வண்டியை ஓட்டுவதைப்போல அவ்வப்போது அனுபவம் ஏற்படும். தேவையற்ற இடத்தில் ஓட்டுநர் வண்டியை விரட்டும்போது அதிர்ச்சியில் இதயம் இதழ்களைத் தொடும். பேருந்துப் பயணம் அருகில் அமர்ந்திருப்பவர்களைப் பொருத்து அமைகிறது. உபாதை வருகிறபோது கழிக்கிற உபாயம் குறைவு. அதிக தூரம் போகிறபோது இரவில் நடப்பதால் பலருடைய குறட்டைகளுக்கு நடுவே இருட்டு மிரட்டு கிறது.

ரெயில் பயணம் சுகமானது. வசதியாய்த் தூங்கவும், துணிச்சலாய் தண்ணீர் குடிக்கவும், ஒழிச்சலாய்ப் படிக்கவும், கால்களை மடக்கவும், அருகிருப்பவர்களை சிநேகம் பிடிக்கவும் அதுவே ஏற்றது. உற்றுக் கவனித்தால் ஒரு சிறுகதை பயணத்தின் வழியே பிறக்க வாய்ப்புண்டு.

அதிலும் முதல் வகுப்புப் பயணம் வியர்த்தம். அதில் வருகிற பலர் மடிக்கணினியை மனிதர்களைக் காட்டிலும் அதிகம் நேசிப்பவர்கள். இரண்டாம் வகுப்புப் பயணம் இனிமையானது. விற்பனை செய்ய வருபவர் களும், பயணி களோடு மென்மையான சூதாட்டம் நடத்தும் வர்த்தகர்களும், எதற்கும் ஏமாறத் தயாராக இருக்கும் சில சிரித்த முகங்களும் நம் அனுபவத்தை ஆழப்படுத்துகிறார்கள்.

சக பயணிகளைப் பார்த்தால் போதும், பொழுதுபோக்குக்கு குறைச்சலில்லை. விசித்திரமான பழக்கங்கள், வித்தியாசமான நடவடிக்கைகள், வேறுபட்ட முகபாவங்கள் என நம் அனைவரிடமுமே நகைச்சுவை நர்த்தனமாடுகிறது. கவனித்து மகிழத்தான் நாம் தயாராக இல்லை.

பதார்த்தங்களை விற்பவர்கள், யார் அவற்றை வாங்கிச் சாப்பிடு வார்கள் என எப்படி சரியாக கணிக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. சிலர் எங்கு சென்றாலும் வீட்டையே தூக்கிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள் என்பதை அவர்கள் சுமந்து வரும் பெட்டிகள் சுட்டுகின்றன. பயணத்தின் நடுவே நண்பர்களாகி வாழ்நாள் முழுவதும் தொடரும் நட்புகளும் உண்டு.

ஒரு முறை நாக்பூரிலிருந்து முன்பதிவு செய்யாமல் சென்னை வரை நின்றே பயணம் செய்த அனுபவம் உண்டு. இறங்கியபோது கால்கள் நமத்துப்போய் பாதங்கள் காணாமல் போன உணர்வு.

கல்லூரியில் படிக்கும்போது அகில இந்திய சுற்றுலாவிற்கு எங்களை பல்கலைக்கழகம் அழைத்துச் சென்றது. பயிர்களைப் பார்க்கவும், பரவசம் சேர்க்கவும் பாதிப்பாதி என்ற விகிதத்தில் கட்டமைக்கப்பட்ட பயணம். எங்கள் வகுப்பே ஒரு பெட்டியில் பயணப்பட்டது. பெட்டி முழுவதும் நாங்கள் மட்டுமே.

தொடக்கத்தில் ஒரே வரிசையில் அடம்பிடித்து இடம் பிடித்தவர்கள் ஒரே வாரத்தில் பிரிந்து போனார்கள். இருபத்து நான்கு மணி நேரமும் ஒருவரோடு இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அப்போது உணர்ந்தோம். சக மாணவர்களோடு பயணிக்கும்போது யார் மேன்மையானவர்கள் என்பதை அறியும் வாய்ப்பும் ஏற் படுகிறது. பணத்தைத் தொலைத்தவர்கள் உண்டு. அனைவரும் அவர்கள் செலவை பகிர்ந்ததும் உண்டு. ஒரு பயணம் எத்தனை அனுபவங்களை இதயத்தில் சேமித்து வைத்துவிடுகிறது.

பணியில் சேர்ந்து ராணுவப் பயிற்சிக்காக டெல்லியிலிருந்து நாகாலாந்து பயணப்பட்டோம். எங்களுக்கு ஜக்கபாமா என்கிற இடத்தில் 24-ம் மலைப்படைப் பிரிவில் பயிற்சி. தொடர்வண்டியில் நண்பர் களோடு சென்றோம். என்னை பெட்டியிலேயே இருக்கச் சொல்லி விட்டு நண்பர்கள் அங்கங்கே இறங்கி பழங்களோடும், பதார்த்தங்களோடும் வருவார்கள்.

வண்டி பீகாரை நெருங்கும்போது, பெயர்ப்பலகையைப் பார்க்காமலேயே அங்கு வந்து விட்டோம் என உணர்ந்தோம். எந்த முன்பதிவும் செய்யாமல் யார் வேண்டுமானாலும், எந்த வகுப்பில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் என்கிற புதிய பொதுவுடைமை அமலில் இருக்கும் மாநிலம் அது. கேட்டால் ‘படுப்பதற்குத்தான் பதிவு, அமர்வதற்கு அல்ல’ என்கிற சட்ட வியாக்யானத்தை அவர்கள் முன்வைப்பார்கள்.

ரெயில் பெட்டியைப்பற்றிப் பேசுவது வியர்த்தம் என்று கட்டுப்பெட்டியாய் பெட்டி படுக்கைகளின் மீது மட்டும் கண் வைப்போம். வருகிற பரிசோதகர்களும் எங்களிடம் மட்டும் பயணச்சீட்டை காண்பிக்கச் சொல்லி கடமையில் சிறிதும் பிறழாமல் கண்ணியமாக நடந்தார்கள்.

பீகார் என்பது ‘விஹார்’ என்பதன் திரிபு. புத்த விஹார்கள் அதிகம் இருந்ததால் அந்தப் பெயர். புத்தர் அப்பகுதி தீ, வெள்ளம், பங்காளிப் பகைமை (யீவீக்ஷீமீ, fl-o-od, feud) ஆகிய மூன்றால் பாதிக்கப்படும் என்று அன்றே சொன்னார்.

தொடர்வண்டியிலேயே இப்படி என்றால் உள்ளூர் வண்டிகளில் கேட்கவே வேண்டாம். உண்பதும், உடுப்பதும், நாட்டியமாடுவதும், நாதமிசைப்பதும் பண்பாடு அல்ல. யாரும் நம்மைப் பார்க்காதபோதும் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதே பண்பாடு. ஒட்டுமொத்த சமூகமும் நம் மீது நம்மையும் அறியாமல் ஏற்படுத்தும் தாக்கம் பண்பாடாக வேரூன்றி விடுகிறது. அதிகம் பேர் பயணச்சீட்டு வாங்காத ஊரில் அது தவறாகப்படுவதில்லை.

இப்போது கதிகாரிலிருந்து மணிகரி செல்லும் காலை ஏழு மணி ரெயிலில் யாரும் சீட்டு இல்லாமல் பயணிப்பது இல்லை. ஆறு ஆண்டுகளாக ரெயில்வே கோட்டம் நல்ல வருவாயோடு இயங்கி வருகிறது.

இதற்கு மூல காரணம் அங்கத் தாக்கூர் என்கிற 52 வயது சமூக ஆர்வலர். ‘தாதாகிரி’ ஓங்கி ஒலிக்கும் உலகில் ‘காந்தி கிரி’ மூலம் செயல்படுவர் அவர். பயணிகளை பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு பயணிக்கும்படி வற்புறுத்துவதே அவர் பணி.

வெள்ளை காதி உடையில் காந்திக் குல்லாவுடன் தினமும் 30 கிலோ மீட்டர் பயணம் செய்து காலையில் இந்த வேள்வியைச் செய்கிறார். மற்ற நேரங்களில் விண்ணப்பப் படிவங்களை வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் விற்று வயிற்றைக் கழுவு கிறார். அவர் தொடங்கிய இந்த முயற்சி ஒரே மாதத்தில் பயனளித்தது. இப்போது பரிசோதகரே தேவையில்லாத அளவிற்கு மக்களிடம் தூய்மை. ஏழைகளுக்கு அவரே பயணச்சீட்டு வாங்கி அனுப்பி வைக்கிறார்.

காந்தியம் சொல்லும் சாத்வீகம் இப்போதும் சாத்தியம் என்பதே இச்செய்தி சொல்லும் சேதி.

(செய்தி தொடரும்)

Next Story