பிச்சாம்பட்டி கண்மாய் வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும், விவசாயிகள் கோரிக்கை
பிச்சம்பட்டி கண்மாய் நீர்வரத்து வாய்க்காலை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டமனூர்,
ஆண்டிபட்டி அருகே பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் பிச்சம்பட்டி கண்மாய் உள்ளது. இதன் மூலம் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதே சமயம் ஆண்டிபட்டியில் உள்ள சீனிவாசநகர், காமராஜ்நகர், ஜக்கம்பட்டி, பாப்பம்மாள்புரம், கொண்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
பிச்சம்பட்டி கண்மாயில் தண்ணீர் இருந்தால் மட்டுமே இப்பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து வரும் சிற்று ஓடைகள் தெப்பம்பட்டியில் இணைந்து, தெப்பம்பட்டி பெரிய ஓடை வழியாக மாயாண்டிபட்டி, கோத்தலூத்து வழியாக உள்ள வாய்க்கால் மூலம் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை இல்லாததால், கண்மாய்க்கு நீர்வரத்து இல்லை. இதனால் தண்ணீர் தேக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு கண்மாய்க்கு நீர்வரத்து வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது மாயாண்டிபட்டி மற்றும் கோத்தலூத்து வழியாக கண்மாய்க்கு நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தும், மழை நீர் கண்மாய்க்கு செல்லாமல் சாலைகளின் வழியாக வழிந்து ஓடி வீணாகியது.
தற்போது கண்மாய் வறண்டு காணப்படுவதால், ஆண்டிபட்டி பகுதியில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து உள்ளது. இதன் காரணமாக குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே கண்மாய்க்கு நீர்வரத்து வாய்க்காலை தூர்வாரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.