அம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


அம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:00 AM IST (Updated: 14 Aug 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்துள்ள தேளூர் கிராமத்தில் சுயம்பு தேவிகருமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வருடம் தோறும் பால்குடம் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து தேளூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோவில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர்.

அபிஷேகம்

அதைதொடர்ந்து தேவிகருமாரி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மூலம் தேவிகருமாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தேளூர், ஓரத்தூர், விளாங்குடி, மண்ணுழி, ரெட்டிபாளையம், வி.கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் தேளூர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மாரியம்மன் கோவில்

அரியலூர் மின் நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிமாத கடைசி ஞாயிற்று கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து சந்தை பேட்டை, ஜெயங்கொண்டம் சாலை வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், பால் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாரியம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் அரியலூர் நகரில் உள்ள முருகன், விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Tags :
Next Story