திருச்சி மாநகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள்-ஆட்டோவை திருடிய 3 பேர் கைது


திருச்சி மாநகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள்-ஆட்டோவை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2017 4:45 AM IST (Updated: 14 Aug 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி ஆழ்வார்தோப்பை சேர்ந்தவர் கவுசிக். இவர் கடந்த 9-ந் தேதி திருச்சி தெப்பக்குளம் தபால்நிலையம் அருகே அவருடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது, அந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து கவுசிக் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். திருச்சி டைமண்ட்பஜார் கீழசாயக்காரத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் கடந்த 12-ந் தேதி கீழ சாயக்காரத்தெருவில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போய் விட்டதாக கோட்டை குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் அளித்தார்.

திண்டுக்கல் கருப்பண்ணசாமிகோவில்தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவர் கடந்த 12-ந் தேதி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது, அந்த ஆட்டோ திருட்டு போய் இருந்தது. இது குறித்து அவர் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் திருட்டு போன வாகனங்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து ஓயாமரி சுடுகாடு அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அந்த ஆட்டோ கடந்த 12-ந் தேதி திருமணமண்டபத்தின் அருகே திருடப்பட்டது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆட்டோவில் இருந்த 3 பேரிடம் விசாரித்தபோது, அவர்கள் வரகனேரி பிச்சைநகரை சேர்ந்த ஷேக்தாவூத்(வயது 26), செந்தண்ணீர்புரம் அண்ணாநகரை சேர்ந்த ராஜா(23), செந்தண்ணீர்புரம் முத்துமணிடவுனை சேர்ந்த பழசு என்கிற பிரபாகரன்(28) என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் தான் தெப்பக்குளம் தபால்நிலையம் அருகிலும், கீழசாயக்காரத்தெருவிலும் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும், திருமண மண்டபம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவையும் திருடி உள்ளார்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். 

Related Tags :
Next Story