ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு கச்சா எண்ணெய் கசிந்ததால் கிராம மக்கள் பீதி


ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு கச்சா எண்ணெய் கசிந்ததால் கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 14 Aug 2017 4:45 AM IST (Updated: 14 Aug 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே மாதிரிமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கசிந்தது. இதனால் அப் பகுதி கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டது.

திருவாலங்காடு,

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளால் நிலத்தடி நீர் ஆதாரங்களுக்கும், விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி பல்வேறு அமைப்பினரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தில் இருந்து வெளியேறும் வரை போராட போவதாக கூறி கதிராமங்கலம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா மாதிரிமங்கலம் கிராமத்தில் பாசன வாய்க்காலுக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி. குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.

மாதிரிமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இங்கு 2 கச்சா எண்ணெய் கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குத்தாலத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதற்காக நிலத்துக்கு அடியில் 6 அடி ஆழத்தில் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.

உடைப்பு ஏற்பட்ட குழாய் மாதிரிமங்கலத்தில் உள்ள குத்தாலம் பாசன வாய்க்காலுக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய் ஆகும். இதே குழாயில் ஏற்கனவே 3 முறை உடைப்பு ஏற்பட்டது. இதை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர். இந்த நிலையில் தற்போது 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் தாசில்தார் திருமாறன், துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கசிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர். பின்னர் கசிவு நிறுத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியில் பெட்ரோல் வாசம் வீசியது.

இதுகுறித்து மாதிரிமங்கலம் கிராம மக்கள் கூறியதாவது:- இங்கு ஓ.என்.ஜி.சி. குழாயில் 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. ஆகவே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் குழாயில் பராமரிப்பு பணி மேற்கொள்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகளால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்து ஓ.என்.ஜி.சி. மீண்டும் பணிகளை தொடங்க கூடாது. இப்பகுதியில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாதிரிமங்கலம் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மாதிரிமங்கலத்தில் இருந்து குத்தாலத்துக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு எடுத்து செல்லும் பணி பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story