தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 1 லட்சத்து 16 ஆயிரம் வீடுகளில் தனிநபர் கழிவறைகள் கட்டுவதற்கு இலக்கு


தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 1 லட்சத்து 16 ஆயிரம் வீடுகளில் தனிநபர் கழிவறைகள் கட்டுவதற்கு இலக்கு
x
தினத்தந்தி 14 Aug 2017 4:30 AM IST (Updated: 14 Aug 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சத்து 16 ஆயிரம் வீடுகளில் தனி நபர் கழிவறைகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டம் சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த 9-ந் தேதி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை சுகாதார விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் ஊராட்சி ஒட்டகுடிசல் கிராமத்தில் சுகாதார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திறந்த வெளியில் மலம் கழித்தலில் இருந்து விடுதலை பெறுவதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் 4 வீடுகளில் கட்டப்பட்டு வரும் தனி நபர் கழிவறைகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த கட்டுமானப் பணிகளில் கலெக்டர் தன்னையும் ஈடுபடுத்தி கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சத்து 16 ஆயிரம் வீடுகளில் தனி நபர் கழிவறைகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது ஒட்டகுடிசல் கிராமத்தில் நான்கு வீடுகளில் கழிவறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கட்ட வேண்டும். மேலும் தங்கள் வீடுகளிலும் அருகில் வசிப்பவர்களுக்கும் கழிவறை கட்டுவதன் அவசியம் குறித்த முக்கியத்துவத்தை எடுத்துக் கூற வேண்டும். கழிவறைகள் கட்டினால் மட்டும் போதாது. அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர் ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story