தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமானில் இருந்து 450 பேர் ஹஜ் புனித பயணம் முதல் விமானம் புறப்பட்டது


தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமானில் இருந்து 450 பேர் ஹஜ் புனித பயணம் முதல் விமானம் புறப்பட்டது
x
தினத்தந்தி 14 Aug 2017 6:15 AM IST (Updated: 14 Aug 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து 450 பேருடன் ஹஜ் புனித பயணத்திற்காக முதல் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த பயணிகளை அமைச்சர் நிலோபர் கபில் வழியனுப்பி வைத்தார்.

ஆலந்தூர்,

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்வது முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று ஆகும். அதன்படி உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் ஆண்டுதோறும் துல்ஹஜ் மாதத்தில் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் ஆண்டுதோறும் ஏராளமான முஸ்லிம்கள் இந்த புனித பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இதற்கான நபர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தேர்வு செய்து வருகிறது. இந்த ஆண்டுக்கான புனித பயணத்துக்கு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 3,468 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பயணத்திற்காக சென்னையில் இருந்து 11 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

3 பகுதிகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 221 பெண்கள் உள்பட 450 பேர் கொண்ட முதல் குழு நேற்று ஹஜ் புனித பயணத்திற்காக புறப்பட்டு சென்றனர். இந்த குழுவினர் அடங்கிய முதல் விமானம் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டு சென்றது.

ஹஜ் பயணம் சென்றவர்களுக்கு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் ஆகியோர் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் இந்திய ஹஜ் கமிட்டி குழு உறுப்பினர் முகமது இர்பான் அகமது, தமிழக அரசு செயலாளர்கள் முகமது நஜிமுத்தீன், கார்த்திக் உள்பட ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து அமைச்சர் நிலோபர் கபில் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதை உயர்த்துவது குறித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதி உள்ளோம். ஹஜ் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.

கடந்த 3 ஆண்டுகளாக ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்து, வாய்ப்பு கிடைக்காதவர்கள், 70 வயது கடந்தவர்கள் என 2200–க்கும் மேற்பட்டோர் குலுக்கல் இல்லாமல் நேரடியாக இந்த ஆண்டு தேர்ந்து எடுக்கப்பட்டதாக கூறிய அப்துல் ஜப்பார், ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி கடமையை நிறைவேற்ற தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஹஜ் புனித பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் சிறப்பு பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்படி 3–வது நுழைவு வாயில் வழியாக செல்ல ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விமான நிலைய ஆணையகம், விமான நிலைய போலீசார், சுங்க இலாகா, குடியுரிமை அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story