2 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்களுக்கு நீர்வரத்து; விவசாய பணிகள் தீவிரம்
காரியாபட்டி, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்களுக்கு தண்ணீர் வந்துள்ளது. விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.
காரியாபட்டி.
மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மழை பெய்யாமல் வறட்சி தலைவிரித்தாடியது. இந்த நிலையில் ஆறுதல் தரும் வகையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வறண்டு கிடந்த கண்மாய்களுக்கு நீர் வரத்தொடங்கியுள்ளது.
காரியாபட்டி பகுதியில் முடுக்கன்குளம், அல்லாளப்பேரி, சத்திரம் புளியங்குளம், சிருகுளம் ஆகிய இடங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோல தாயில்பட்டி பகுதியில்வெற்றிலையூரணை பெரிய கண்மாய், வல்லம்பட்டி கண்மாய், விஜயகரிசல்குளம் பாண்டியன்குளம், செவல்பட்டி பாலாறு கண்ட அய்யனார் கண்மாய், சிப்பிபாறை கண்மாய் ஆகியற்றுக்கு தண்ணீர் வந்துள்ளன. வடகரை, கீழாண்மறைநாடு ஆகிய கிராமங்களில் உள்ள ஊருணிகள் நிரம்பியுள்ளன. மேலாண் மறைநாடு கண்மாயில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் அதில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் வெள்ளப்பாண்டி ஊழியர்களுடன் அங்கு சென்று மணல் மூடைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறாத வகையில் நடவடிக்கை எடுத்தார்.
விருதுநகர் பகுதியிலும் கண்மாய்களுக்கு நீர்வர தொடங்கியுள்ளது.
கண்மாய்களுக்கு நீர்வந்துள்ளதை தொடர்ந்து விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நெல் நாற்று பாவும் பணிகளும் எள். கடலை பயிரிடும் பணிகளும் நடந்து வருகின்றன. தற்போதுள்ள தண்ணீர் 30 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தாலும் வடகிழக்கு பருவமழை கைகெடுக்கும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கியுள்ளனர். மேலும் நிலத்தடிநீர் உயர்ந்து ஆழ்குழாய் கிணற்று பாசனத்தின் மூலம் சமாளித்து விடலாம் எனவும் கருதுகின்றனர்.
திருச்சுழி பகுதியில் மாலை நேரங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதில் பண்ணை மூன்றடைப்பு கிராமத்தை சேர்ந்த தபராஜ், ஜெயராஜ் ஆகியோருக்கு சொந்தமான நூற்றாண்டை கடந்த வீடு நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது. இடிபாடுகள் அருகிலுள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் மேல் விழுந்ததால் அவரது வீடும் சேதம் அடைந்தது. வீடு இடிந்தபோது அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். தக்கசமயத்தில் உஷாராகி வீட்டை விட்டு வெளியேறியதால் அனைவரும் தப்பினர்.