பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் சித்தராமையா நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்


பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் சித்தராமையா நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:01 AM IST (Updated: 14 Aug 2017 4:01 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் நாளை சுதந்திர தினவிழாவையொட்டி முதல்–மந்திரி சித்தராமையா தேசிய கொடி ஏற்றுகிறார்.

பெங்களூரு,

பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினவிழாவையொட்டி முதல்–மந்திரி சித்தராமையா தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர்களிடம் இந்தியா விடுதலை பெற்ற தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15–ந்தேதி சுதந்திர தின விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதேப் போல் பெங்களூருவில் மானேக்ஷா மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றிவைக்கிறார்.

இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத், பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் சங்கர், மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில்குமார் ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தினவிழா வருகிற 15–ந் தேதி (நாளை) மானேக்ஷா மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு காலை 9 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.

அப்போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வானத்தில் பறந்தபடி தேசிய கொடிக்கு மலர்களை தூவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நடக்கும் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை முதல்–மந்திரி சித்தராமையா ஏற்றுக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து, மாநில மக்களுக்கு அவர் சுதந்திர தின உரையாற்றுகிறார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவர்னர் வஜூபாய் வாலா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்காக மைதானத்தில் 9 ஆயிரம் இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினவிழாவையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் தேசிய மாணவர் படை, ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படை, பெண் போலீஸ், பல்வேறு பள்ளி மாணவ–மாணவிகள் என 50–க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்கின்றன.

ராணுவ வீரர்கள், போலீஸ்காரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் கேரள மாநில போலீஸ் குழுவும் அணிவகுப்பில் இடம் பெறுகிறது. மேலும் 2,700 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

குறிப்பாக சுதந்திர தினவிழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 9 துணை போலீஸ் கமி‌ஷனர்கள், 16 உதவி போலீஸ் கமி‌ஷனர்கள், 51 இன்ஸ்பெக்டர்கள், 91 சப்–இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார், ஊர்க்காவல் படையினர், கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை, அதிரடிப்படை வீரர்கள் உள்பட 1,500–க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்பு படை மாதிரியான கருடா கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் மைதானத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளை மேற்கொள்ள ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. 2 கமாண்டோ படை வாகனங்கள், 2 குண்டு துளைக்காத வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. மைதானத்தில் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன

மானேக்ஷா மைதானத்தை சுற்றியுள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு ரக குட்டி விமானங்கள், பெரிய பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 20 டாக்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவ ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 8 தீயணைப்பு வாகனங்களும் மைதானத்தை சுற்றி நிறுத்தப்பட்டு இருக்கும்.

சுதந்திர தின விழாவை காண வருபவர்கள் சிகரெட், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள், பட்டாசு, ஆயுதங்கள், வீடியோ கேமராக்கள், செல்போன்கள், ஹெல்மெட், பைகள், துண்டு பிரசுரங்கள் எடுத்து வருவதற்கு அனுமதி இல்லை. தேசிய கொடியை மட்டும் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள். மற்ற எந்த கொடியையும் மைதானத்திற்குள் எடுத்து வர அனுமதி கிடையாது. தண்ணீர் பாட்டில் கொண்டு வரவும் அனுமதி இல்லை. விழாவை காணவருபவர்கள் 8.30 மணிக்குள் மைதானத்திற்குள் வந்து விட வேண்டும்.

விழா நடைபெறும் மானேக்ஷா மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே சுதந்திர தின விழா பாதுகாப்பு ஒத்திகையில் நேற்று போலீசார் ஈடுபட்டனர். அதேப் போல் விழாவில் கலந்துகொள்ளும் பல்வேறு கலைக்குழுவினரும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Next Story