புதுவையில் சுதந்திரதின விழா: தேசிய கொடியை நாராயணசாமி ஏற்றி வைக்கிறார்
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுவை உப்பளம் மைதானத்தில் நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறும் விழாவில் தேசியகொடியை முதல்–அமைச்சர் நாராயணசாமி ஏற்றி வைக்கிறார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு சார்பில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நாளை (செவ்வாய்கிழமை) சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக அங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதற்காக முதல்–அமைச்சர் நாராயணசாமி காலை 8.59 மணிக்கு வருகிறார். அவரை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் ஆகியோர் வரவேற்கின்றனர். விழா மேடைக்கு வரும் நாராயணசாமி தேசியகொடியை ஏற்றி வைக்கிறார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசியகீதம் இசைக்கிறார்கள்.
அதன்பின் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பினை முதல்–அமைச்சர் நாராயணசாமி பார்வையிடுகிறார். மீண்டும் விழாமேடைக்கு திரும்பும் அவர் சுதந்திரதின உரையாற்றுகிறார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும், பல்வேறு துறையினருக்கும் விருதுகளை வழங்குகிறார்.
அதைத்தொடர்ந்து காவல்துறை, ஊர்க்காவல்படை, தீயணைப்புத்துறை, என்.சி.சி., பள்ளி மாணவ–மாணவிகளின் அணிவகுப்பு நடக்கிறது. அணிவகுப்பு மரியாதையை மேடையில் நின்றவாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொள்கிறார்.
தொடர்ந்து பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன்பின் சிறந்த அணிவகுப்பிற்கான பரிசுகள் வழங்கப்படுகின்றன. இறுதியாக தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
அங்கிருந்து சட்டமன்றத்துக்கு நாராயணசாமி வருகிறார். சட்டமன்ற வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து அவர் இனிப்பு வழங்குகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
சுதந்திரதின கொண்டாட்டத்தையொட்டி போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் தலைமையில் போலீசார் நேற்று அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். இதுமட்டுமின்றி நகர் மற்றும் புறநகர் பகுதியில் போலீசார் இரவு, பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தங்கும் விடுதிகள், பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கவர்னர் மாளிகை, சட்டசபை மற்றும் அரசு கட்டிடங்கள், தலைவர்களின் சிலைகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அன்று மாலை கவர்னர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து அளிக்கப்படுகிறது.