நாளை சுதந்திர தின விழா: ஊட்டியில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்


நாளை சுதந்திர தின விழா: ஊட்டியில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 14 Aug 2017 4:57 AM IST (Updated: 14 Aug 2017 4:56 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊட்டியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

ஊட்டி,

நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க் கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை சீர் குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என தகவல் கிடைத்து இருப்பதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நீலகிரி மாவட்ட தலைநகரமான ஊட்டியில் சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

இதையடுத்து, போலீசார் மற்றும் சிறப்பு காவல் படையினர், ஊர்காவல் படை யினர், ஆயுதப்படையினர், தீயணைப்பு துறையினர், என்.சி.சி. மாணவ- மாணவிகள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு, அவர்கள் அமர்ந்து இருக்கும் இடத்துக்கே சென்று சால்வை அணிவித்து அவர்களை கவுரவப்படுத்துகிறார்.

இதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு துறை அதிகாரிகள் ஆகியோருக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்குகிறார். அதன் பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பழங்குடியின மக்களின் கலாசார நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

சுதந்திர தின விழாவையொட்டி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் மைதானத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மைதானத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் சந்தேகப்படும் நபர்கள் தங்கினால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஊட்டி சேரிங்கிராஸ், லவ்டேல் சந்திப்பு, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதுதவிர, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story