1 லட்சம் சில்வர் ஓக் மரங்களை வெட்ட டேன்டீ நிர்வாகம் முடிவு போராட்டம் நடத்தப்போவதாக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் அறிவிப்பு


1 லட்சம் சில்வர் ஓக் மரங்களை வெட்ட டேன்டீ நிர்வாகம் முடிவு போராட்டம் நடத்தப்போவதாக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2017 5:00 AM IST (Updated: 14 Aug 2017 4:59 AM IST)
t-max-icont-min-icon

1 லட்சம் சில்வர் ஓக் மரங்களை வெட்ட டேன்டீ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் அறிவித்து உள்ளது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பாண்டியாறு, நடுவட்டம், சேரங்கோடு, கொளப்பள்ளி, நெல்லியாளம், சேரம்பாடி, குன்னூர், கோத்தகிரி, கோவை மாவட்டம் வால்பாறை என 9 இடங்களில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகங்கள் (டேன்டீ) உள்ளது. 4,500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அரசு தேயிலை தோட்டங்களில் தேயிலை, குறுமிளகு அதிகளவு விளைகிறது. இதுதவிர சில்வர் ஓக் மரங்களும் தேயிலை தோட்டங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்தனம், ரோஸ்வுட் உள்பட விலை உயர்ந்த மரங்களும் அதிகளவு உள்ளன.

இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக 1969-ல் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் (டேன்டீ) உருவாக்கப்பட்டது. பின்னர் 1-4-1974-ல் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. இங்கு 5 ஆயிரம் நிரந்தர மற்றும் 2 ஆயிரம் தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் டேன்டீ அலுவலக நிர்வாக பணியாளர்கள் 200 பேர் உள்ளனர்.

இந்த நிலையில் நிர்வாக குளறுபடிகளால் நாளுக்குநாள் டேன்டீ நலிவுற்று வருவதாக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது ரூ.45 கோடி வரை டேன்டீ கடனில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை ஈடு செய்ய அரசு தேயிலை தோட்டங்களில் உள்ள 1 லட்சம் சில்வர் ஓக் மரங்களை வெட்ட டேன்டீ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக வனத்துறையிடம் அனுமதி பெற விண்ணப்பித்து உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் பல ஆண்டுகள் வளர்ந்து முற்றி போன மரங்களை மட்டுமே வெட்டப்பட உள்ளதாக டேன்டீ நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:- அரசு தேயிலை தோட்டங்களில் சில்வர் ஓக் மரங்கள் மட்டும் வளருவது இல்லை. விலை உயர்ந்த ரோஸ்வுட், சந்தன மரங்களும் உள்ளன. வெட்டப்பட உள்ள சில்வர் ஓக் மரங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்த உடன் சில்வர் ஓக் மரங்களை வெட்டும் போது விலை உயர்ந்த மரங்களையும் வெட்டி கடத்த வாய்ப்பு உள்ளது. எனவே அரசு தேயிலை தோட்டங்களில் உள்ள ரோஸ்வுட், சந்தன மரங்களை கணக்கெடுத்து எண்களால் குறியிட வேண்டும்.

கூடலூர் பகுதியில் உள்ள மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிற நிலையில் டேன்டீயில் அளவுக்கு அதிகமாக மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகி டி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:- அரசு தேயிலை தோட்டங்களில் வளர்ந்துள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்டி விற்பதின் மூலம் ரூ.45 கோடி கடனை அடைக்க உள்ளதாக டேன்டீ நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு தேயிலை தோட்டங்களில் 1 லட்சம் சில்வர் ஓக் மரங்களை வெட்ட டேன்டீ நிர்வாகம் வனத்துறையிடம் அனுமதி கோரி உள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் தனி நபருக்கு மரம் வெட்ட ஒப்பந்தம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

இது முறைகேட்டுக்கு வழி வகுக்கும். எனவே அரசு தேயிலை தோட்டங்களில் ஒவ்வொரு டிவிஷன் வாரியாக சில்வர் ஓக் மரங்களை வெட்டி அனைத்து மர வியாபாரிகளும் கலந்து கொள்ளும் வகையில் பொது ஏலம் விட வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு முழு தொகையும் டேன்டீ நிர்வாகத்துக்கு கிடைக்கும்.

பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில் அளவுக்கு அதிகமாக மரங்களை வெட்டுவதால் தேயிலை தோட்டங்களில் விளைச்சல் குறைய வாய்ப்பு உள்ளது. இதேபோல் நீலகிரி மாவட்டத்திலேயே கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் குறுமிளகு விளைகிறது.

அரசு தேயிலை தோட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்களில் குறுமிளகு செடிகள் படர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக குறுமிளகு விளைச்சல் மூலம் டேன்டீ நிர்வாகத்துக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது. 1 லட்சம் எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவதின் மூலம் குறுமிளகு விளைச்சல் இல்லாமல் போய் விடும். எனவே மரங்களை வெட்டுவதை கைவிட வேண்டும். இல்லையெனில் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்.

நிர்வாக குளறுபடிகளை சரி செய்தாலே அரசு தேயிலை தோட்டங்கள் லாபகரமாக மாறி விடும். இது குறித்து தமிழக தலைமை மற்றும் வனத்துறை செயலாளருக்கு புகார் மனு அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story