கோவை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் நிதி நிறுவன அதிபர் கருகி சாவு


கோவை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் நிதி நிறுவன அதிபர் கருகி சாவு
x
தினத்தந்தி 14 Aug 2017 5:30 AM IST (Updated: 14 Aug 2017 5:12 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் நிதி நிறுவன அதிபர், தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண் எதிரே பரிதாபமாக கருகி உயிரிழந்தார்.

போத்தனூர்,

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 38). இவருடைய மனைவி ஆஷா (35). இவர்களுக்கு ஏசு (13), ஏத்தாய் (11) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். திலீப்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கர்நாடக மாநிலம் கோலாரில் தங்கி இருந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

இவர் விடுமுறை காலங்களில் குடும்பத்துடன் கொச்சியில் உள்ள தனது சகோதரர் அசோக் வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினமும் திலீப்குமார் தனது குடும்பத்தினருடன் காரில் கொச்சி புறப்பட்டார். காரை அவரே ஓட்டி வந்தார்.

கோவையை அடுத்த மதுக்கரை சுங்கச்சாவடி அருகே நேற்று அதிகாலையில் கார் வந்த போது திடீரென்று பழுதாகி நின்றது. காரை ஸ்டார்ட் செய்தபோது அதன் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே திலீப்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளை காரைவிட்டு கீழே இறங்க சொன்னார். உடனே அவர்களும் காரில் இருந்து கீழே இறங்கி விட்டனர்.

பின்னர் அவர் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்த போது திடீரென்று தீப்பிடித்தது. உடனே திலீப்குமார் காரை விட்டு வெளியே வர முயற்சி செய்தார். ஆனால் அவர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் அவரால் வெளியேற முடியவில்லை. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி ஆஷா, திலீப்குமாருடன் இணைந்து பெல்ட்டை கழற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.

திலீப்குமார் தீயில் சிக்கியதை கண்ட ஆஷாவும், குழந்தைகளும் அலறினார்கள். இதைக்கேட்டு சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர்கள் அங்கு ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றதுடன், திலீப்குமாரையும் மீட்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென்று பற்றி எரிந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் திலீப்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே தீயில் கருகினார்.

இது குறித்து தகவலறிந்த கோவை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி காரில் பிடித்த தீயை அணைத்தனர். அப்போது காருக்குள் கரிக்கட்டை போன்று திலீப்குமார் பிணமாக கிடந்தார். அத்துடன் கார் முழுவதும் எரிந்து நாசமானது.

காரில் தீப்பிடிப்பதற்கு முன்பே ஆஷா மற்றும் அவருடைய குழந்தைகள் காரை விட்டு கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுக்கரை போலீசார், திலீப்குமார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.

விபத்து குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகையில், ‘திலீப்குமார் ஓட்டி வந்த கார் தீப்பிடித்ததை பார்த்ததும், வாளியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு உடனே ஓடிச்சென்று கார் மீது ஊற்றினோம். அப்போது லேசாக மழையும் தூறிக்கொண்டு இருந்தது. ஆனாலும் கார் முழுவதும் வேகமாக தீ பரவியதால் அணைக்க முடியவில்லை’ என்றனர்.

திலீப்குமார் போட்டிருந்த சீட் பெல்ட்டை கழற்ற முடியாததால் அதை துண்டித்தாவது காப்பாற்றலாம் என்று நினைத்து கத்தியை எடுக்க ஓடியதாக கூறிய ஊழியர்கள், ஆனால் திரும்பி வருவதற்குள் அருகே செல்ல முடியாத அளவுக்கு கார் முழுவதும் தீ பரவியதாகவும், அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் முடியவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story