4 வழிச்சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் வலியுறுத்தல்


4 வழிச்சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:30 AM IST (Updated: 15 Aug 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்ட எல்லையான சொக்கநாதன்புத்தூர் விலக்கு வரையிலான 4 வழிச்சாலை பணியினை துரிதப் படுத்த வேண்டும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு தொடக்க விழா தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. ராம்கோ குரூப் சேர்மன் வெங்கட்ராமராஜா அதனை திறந்து வைத்தார். இந்த பிரிவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தங்கப்பாண்டியன் தெரிவித்தார். மேலும் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தோர் சிகிச்சைக்கு நீண்ட தொலைவில் உள்ள மதுரை, நெல்லை அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது எனவும், படிப்படியாக ராஜபாளையம் மருத்துவமனைக்கு அனைத்து வசதிகளும் பெற்று தருவதாகவும் கூறினார். மேலும் பொது மக்களின் பங்களிப்போடு கூடுதலாக 5 டயாலிசிஸ் எந்திரம் வாங்கிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். விழாவில் தலைமை மருத்துவர் பாபுஜி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜபாளையத்திற்கு 2010-ம் ஆண்டு புறவழிச்சாலை அமைக்க மாநில அரசால் அனுமதி வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. பணி ஆமை வேகத்தில் போய்க்கொண்டிருந்த நிலையில் இதை விரைவுபடுத்த முயற்சி மேற்கொண்ட போது ராஜ பாளையத்திற்கு புறவழிச்சாலை மட்டும் போதாது திருமங்கலத்திலிருந்து ராஜபாளையத்திற்கு 4 வழிச்சாலை அமைத்தால் வசதியாக இருக்கும் என கருதி சென்னை கிண்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சின்னாரெட்டியை நேரில் சந்தித்து மனு கொடுத்தேன்.

அதன் பலனாக 76 கி.மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்க 2016-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசால் விரிவான அறிக்கை திட்டம் தயாரிக்க டெண்டர் வைக்கப்பட்டதில் அதனை நாக்பூரைச் சேர்ந்த நிறுவனம் எடுத்துள்ளது. மேலும் ஆய்வுக்காக மத்திய அரசால் ரூ.3 கோடியே 45 லட்சம் ஒதுக்கப்பட்டு டெண்டர் எடுத்த நிறுவனத்தால் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வில் 4 வழிச்சாலை அமைப்பதற்கு மூன்று வழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு அதில் எது மக்களுக்கும், அரசுக்கும் வசதியாக அமையும் என்பதை பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பொது மேலாளர் நாக்வி தெரிவித்தார். அவரிடம் திருமங்கலத்திலிருந்து சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கும், கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கும், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கும் ராஜபாளையம் மார்க்கமாகத் தான் செல்லவேண்டி உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதை தடுக்கும் வகையில் இப்பணியை துரிதப்படுத்தி திருமங்கலத்திலிருந்து விருதுநகர் மாவட்ட எல்லை முடிவான சொக்கநாதன்புத்தூர்விலக்கு வரையிலான 4 வழிச்சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வருமாறு கோரிக்கை வைத்துள்ளேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story