நீட் தேர்விற்கு விலக்கு பெற புதுவை அரசு எடுத்த முயற்சிகள் மத்திய மந்திரிக்கு தெரியவில்லை


நீட் தேர்விற்கு விலக்கு பெற புதுவை அரசு எடுத்த முயற்சிகள் மத்திய மந்திரிக்கு தெரியவில்லை
x
தினத்தந்தி 15 Aug 2017 5:45 AM IST (Updated: 15 Aug 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற புதுவை அரசு எடுத்த முயற்சிகள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்–அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாரிகள், எம்.எல்ஏ.க்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் அது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தின் முடிவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் தமிழக மாணவர்களுக்கு ஒரு ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டால் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சுயநிதி கல்லூரிகளிலும் அரசு இடங்களை நிரப்புவதற்கு ஒரு ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசும் மேல் நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.

புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சிலிங் நடத்தியுள்ளோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீத்தாரமன் தெரிவித்த கருத்தை தொடர்ந்து மருத்துவ கல்வியில் மாணவர்களின் சேர்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினோம். இதில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அரசின் தலைமை செயலர், வளர்ச்சி ஆணையர், சட்டத்துறை செயலர், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கை எந்த நிலையில் நடத்தினால் பயன் உள்ளதாக இருக்கும் என்பதற்கான கருத்துக்களை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். இந்த கருத்துக்களை சட்டத்துறை ஆராய்ந்து முடிவு எடுக்கும்.

புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். அதுபோல் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றினோம். மேலும் கடந்த மார்ச் மாதம் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க சட்ட வரையறை தயார் செய்து மத்திய உள்துறை, சுகாதாரத்துறை, சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளோம்.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி புதுச்சேரிக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கடந்த 22–3–2017 அன்று பதில் கடிதம் அளித்துள்ளார். மனித வள மேம்பாட்டுத்துறையும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட்டில் இருந்து விலக்கு கேட்டு புதுச்சேரி அரசு அனுப்பியுள்ள சட்ட வரையறையை ஏற்க முடியாது என கடந்த 16–6–2017–ல் பதில் அளித்துள்ளது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மத்திய நிதி அமைச்சரை சந்தித்தும் பேசியுள்ளோம். மேலும் நானும், அமைச்சர்களும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரிக்கு 5 ஆண்டுகாலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி வந்தோம்.

ஆனால் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு புதுச்சேரி அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய சுகாதாரத்துறையையும், மனித வள மேம்பாட்டுத்துறையையும் நேரடியாக தொடர்பு கொண்டது தெரியாது. அது தெரிந்திருந்தால் புதுச்சேரி அரசு கோரிக்கை வைக்கவில்லை என கூறியிருக்க மாட்டார். அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும். மேலும் அவர் இவ்வாறு கூறியிருப்பது புதுச்சேரி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனின் நேற்றைய அறிவிப்பு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டு நீட்டில் இருந்து விலக்கு கொடுக்க இருப்பது எந்த அடிப்படையில் என தெரியவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு வந்தால் சந்தோ‌ஷம். புதுச்சேரியில் முதல்கட்ட கவுன்சிலிங் நடத்தியுள்ளோம். புதுச்சேரி மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்போம். புதுச்சேரி மாணவர்களுக்கு அதிக இடங்களை பெற்றுத்தருவதுதான் எங்கள் கொள்கை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story