தமிழ்நாட்டை பின்பற்றி புதுவைக்கும் நீட் தேர்வில் விலக்கு பெற நடவடிக்கை
தமிழ்நாட்டை பின்பற்றி புதுவைக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்–அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். இது குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் புதுவையில் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட சென்டாக் கலந்தாய்வு கடந்த மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.
இந்தநிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவரச சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஏற்று தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர முடியாது. எனவே தமிழகத்தை பின்பற்றி தான் செயல்பட வேண்டும். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து புதுவைக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து இதுதொடர்பான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக சட்டசபை வளாகத்தில் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், தனவேலு, விஜயவேணி, ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர். பாலன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஊரில் இல்லாததால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதன்பின் புதுவை சட்டசபை வளாகத்தில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. மாலையில் நடந்த கூட்டத்திலும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வினர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.