வளமான இந்தியாவை உருவாக்க சபதமேற்போம் அமைச்சர்கள் உறுதி


வளமான இந்தியாவை உருவாக்க சபதமேற்போம் அமைச்சர்கள் உறுதி
x
தினத்தந்தி 15 Aug 2017 5:15 AM IST (Updated: 15 Aug 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

வளமான இந்தியாவை உருவாக்க சபதமேற்போம் என்று நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள் சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நம் பாரத நாட்டிற்கு தன்னலம் கருதாத தியாக மறவர்கள் மனஉறுதியுடன் போராடி சுதந்திரம் பெற்று தந்தார்கள். மகாத்மா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக் கம் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது.

வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் நம் தேசத்தில் மதத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்வோரை நாம் புறம் தள்ள வேண்டும். அரசியல் சுயலாபத்திற்காக மக்களிடம் பேதமையை உருவாக்கும் தீய சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். நாட்டு மக்கள் நலனுக்காக தேசபற்றுடன் சகோதர மனப்பான்மையுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

தியாக தலைவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை காத்து நின்று சூழ்ச்சிகளை எதிர்கொண்டு வளர்ச்சிமிகு இந்தியாவை உருவாக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி காட்டும் தூய பாதையில் பயணிப்போம். வளமான, வலிமையான, வளர்ச்சி மிக்க இந்தியாவை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் ஷாஜகான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பாரத நாட்டின் 71-வது சுதந்திர தின விழாவை தேச பற்றோடும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் நமது இந்திய நாட்டு மக்களுக்கும், புதுவை மாநில மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரம் பெற அரும்பாடு பட்ட தேசத்தலைவர்களையும், தியாகிகளையும் இந்த தருணத்தில் நினைவில் கொண்டு அவர்களை போற்றி வணங்குவோம்.

நமது நாட்டின் குடியரசு தலைவராக இருந்து மறைந்த டாக்டர் அப்துல் கலாம் கூறியது போல இந்திய தேசம் வல்லரசு ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவில் கொண்டு தாய்த்திருநாடு முன்னேற அயராது பாடுபடுவோம். நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த அத்தனை தியாக உள்ளங்களையும் போற்றுவோம்.

மதசார்பற்ற மனித நேயத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது கடமையாற்ற இந்த சுதந்திர திருநாளில் சபதம் ஏற்போம். வாழ்க நாடு, வளர்க நாட்டின் பொருளாதாரம், வெல்க இந்தியர்களின் ஒற்றுமை என்று கூறி மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகம் புகழினை கொண்ட பழம்பெரும் இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா உலகமெங்கும் உள்ள இந்தியர்கள் போற்றும் தேசியத் திருவிழா. இந்த திருநாளில் சுதந்திரத்தை பெற்றுத் தந்த தியாகிகளையும், வழிகாட்டியாய் நின்ற பெரும் தலைவர்களையும், உயிரை துச்சமென நினைத்து இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை என்றும் காத்து நிற்கும் ராணுவ சகோதரர்களையும், இந்திய நாட்டின் உயிர்நாடிகளாக விளங்கும் விவசாய பெருமக்களையும் எண்ணி பெருமிதம் கொள்வோம்.

இந்தியாவின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் இன்றியமையாதது. புதுவை மாநில மக்களாக நாம் சுற்றுச்சூழல், தனிமனித ஒழுக்கம், அறிவு சார் முன்னேற்றம், தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட அனைத்து வழியினங்களிலும் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்போம் என 2017ம் ஆண்டு சுதந்திர தின நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடந்த 70 ஆண்டுகளாக மக்களாட்சியின் உன்னதத்தை உலகிற்கு பறைசாற்றிய மாபெரும் சுதந்திர நாடாகவும், உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடாகவும் நம் நாடு திகழ்ந்து வருகிறது. சாதி, மதம், இனம், மொழி என பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் அவற்றில் ஒற்றுமை கண்டு, நம் இந்திய துணைகண்டம் ஏற்றம் பெற்று வருகிறது.

இந்த 71-வது சுதந்திரத் திருநாளில் நாட்டின் விடுதலைக்கு உழைத்து, ஈடுஇணையற்ற சுதந்திரத்தை பெற்றுத்தந்த அண்ணல் மகாத்மா, பண்டித ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், டாக்டர் அம்பேத்கர், வ.உ.சிதம்பரனார், மகாகவி சுப்ரமணிய பாரதியார், பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மாமனிதர்களை நினைவு கூருவோம்.

இந்நன்னாளில் இந்திய சுதந்திரத்தின் மேன்மைகளை காத்திட, நம் புதுச்சேரி மாநிலம் வளம் காண, பெண் சுதந்திரம் காக்கப்பட, தூய்மையான புதுச்சேரி உருவாகிட, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் காத்திட, குடிநீர் பாதுகாக்கப்பட, எதிர்கால தேவையைக் கருதி மழைநீரை சேமித்திடவும், விவசாயம் செழித்திடவும், தொழில்வளம் பெருகவும் சபதமேற்போம்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேசத்தின் விடுதலைக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த தியாகச்செம்மல்கள் அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்ந்து அவர்களின் நல் போதனைகளை ஏற்று நடப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் விசுவாச கடமையாகும். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும், புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதிகளை இன்றளவும் நிறைவேற்றாமல் உள்ளது. இந்த மக்கள் விரோத புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசை மக்கள் துணையுடன் அகற்றி, மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி நமது புதுச்சேரி மாநிலத்திலும் விரைவில் அமைய அ.தி.மு.க.வினர் அனைவரும் இந்நாளில் சபதம் ஏற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர தினம் என்பது வெள்ளையனை வெளியேற்றிய வெற்றி தினம் மட்டுமல்ல. முழுமை பாரதம் முகம் திறந்த நன்னாள். நம் இந்திய தேசத்தின் ஒன்றுமைத் திருநாள். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தனது இன்னுயிரையும் நீத்த சுதந்திர போராட்ட தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் நமது வீர வணக்கத்தை செலுத்துவோம். அடிமைதனை அறுத்த அகமகிழ்வில் தன்னாட்சி தந்த மனக்கழிப்பில் நாம் 70 ஆண்டுகள் கழித்து விட்டோம். ஆனால் வளர்ச்சி முன்னேற்றத்தில் பின்தங்கி விட்டோம்.

2014ம் ஆண்டு பிரதமர் மோடியின் சுத்தமான பாரதம் மற்றும் பெண்ணுரிமை பாதுகாப்பு என்ற புதிய முழக்கத்தோடு மீண்டும் ஒரு புதிய எழுச்சியோடு ஒரு புதிய உத்வேகத்தோடு சுதந்திரம் கொண்டாடப்பட்டது. இனி வரும் சுதந்திர தினம் புதுவை மக்களுக்கு ஒரு புதிய விடியலுக்கு பூபாளம் இசைக்கும் சுதந்திர தினமாக அமையும்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.


Next Story