சென்னை துறைமுகத்துக்குள் வேகமாக வந்த கார் மோதி கண்டெய்னர் லாரி டிரைவர் பலி
சென்னை துறைமுகத்துக்குள் அசுர வேகத்தில் வந்த கார் மோதியதில் கண்டெய்னர் லாரி டிரைவர் பலியானார்.
ராயபுரம்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் சென்னையில் தங்கியிருந்து துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் துறைமுகத்தின் 5-வது நுழைவு வாயில் அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு, டீ சாப்பிட பரமசிவம் சென்றார்.
அப்போது துறைமுகத்துக்குள் காண்டிராக்ட் எடுத்திருக்கும் அதிகாரி ஒருவரின் கார் அசுர வேகத்தில் வந்தது. அந்த கார் பரமசிவம் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பரமசிவம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வேலை நிறுத்தம்
நள்ளிரவு நேரம் என்பதால் கார் ஒட்டி வந்த டிரைவரும், அதில் இருந்த காண்டிராக்ட் அதிகாரியும் பரமசிவத்தின் சடலத்தை ஓரமாக போட்டு விட்டு விபத்தை மறைக்க முயற்சித்துள்ளதாக தெரிகிறது. இதையறிந்த சக டிரைவர்கள் சம்பவத்தை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் பரமசிவம் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனால் துறைமுகத்தில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர்களின் வேலை நிறுத்தத்தால் துறைமுகம் ஜீரோ வாயிலில் இருந்து எண்ணூர் வரையில் கண்டெய்னர் லாரிகள் வரிசையாக நின்றன. இந்த விபத்து தொடர்பாக துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story