தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 15 Aug 2017 4:15 AM IST (Updated: 15 Aug 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தஞ்சையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி, மருத்துவகல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் மருத்துவமனை சார்பில் தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம், ராசா மிராசுதார் மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நடந்தது.

இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் நிலவேம்பு குடிநீரையும் வழங்கினர். பின்னர் சுகாதாரத்தை பேணிக்காப்பது தொடர்பாக உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.அதனைத்தொடர்ந்து முகாம் களில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும், அமைச்சர் கள் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பரசுராமன் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, இயக்குனர்கள் ஜோஸ், பானு, மாநகராட்சி ஆணையர் வரதராஜ், பால்வள தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குனர் வக்கீல் சரவணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பினனர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தொற்று நோய், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுக்குள் கொண்டுவந்து முற்றிலும் ஒழிக்கும் தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சியில் ஆய்வு நடைபெறுகிறது. ஏற்கனவே 15 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். 29 வகையான வைரஸ் காய்ச்சல் உள்ளது. இதில் காய்ச்சல் என வருபவர்களில் 10 சதவீதம் பேருக்கு டெங்கு அறிகுறிகள் காணப்பட்டாலும் 1 சதவீதம் பேர் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தொடர்பாக அனுமதிக்கப்பட்ட 43 பேரில் 2 பேருக்கு தான் டெங்கு காய்ச்சல் உள்ளது. இதனை குணப்படுத்த உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றாலும் தவறு இல்லை. இருப்பினும் அவர்களுக்கு இது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதோடு, கையேடும் வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரத்த அணுக்கள் குறைவாக இருந்தால் உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தி உள்ளோம்.

அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்துகள், ரத்தம் இருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு ரத்தம் தேவை என்றால் அவர்கள் அரசு மருத்துவமனையை அணுகினால் உடனடியாக ரத்தம் வழங்கப்படும். ரத்தம் வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. அதனை பரிசோதனை செய்வதற்கு தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் ரத்த வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு அறிகுறிகள் உள்ளன. அது தற்போது இறங்குமுகமாக உள்ளது. பொதுமக்களிடமும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். டெங்கு காய்ச்சல் வந்தால் குணப்படுத்தி விடலாம். மற்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, அவர் சிகிச்சை பெற தாமதம் ஆனால் இறப்பு நேரிடுகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணிகளில் 30 ஆயிரம் மஸ்தூர் பணியாளர்கள், 3 ஆயிரத்து 500 சுகாதார ஆய்வாளர்கள், 416 நடமாடும் குழுக்கள், 150 பள்ளி குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இன்னும் 15 நாளில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story