எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்


எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:45 AM IST (Updated: 15 Aug 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி வேதாரண்யம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கபிலன்(வயது49) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த தேவதாஸ், தேத்தாக்குடியை சேர்ந்த ராமசாமி, கோவில்பத்தை சேர்ந்த கோவிந்தசாமி ஆகிய 4 மீனவர்களும் ஆறுகாட்டுத்துறையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கோடியக்கரையின் தென்கிழக்கே சேதுசமுத்திர திட்ட தூர்வாரும் இடத்தின் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி நாகை மாவட்ட மீனவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களின் படகை பறிமுதல் செய்தும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அள்ளிச் சென்றனர். இதை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

வேலை நிறுத்தம்

தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றதால், மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடன் மீட்டு தர வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து நேற்று ஆறுகாட்டுத்துறையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Related Tags :
Next Story