காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 15 Aug 2017 4:00 AM IST (Updated: 15 Aug 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்று வரும் மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

வண்டலூர்,

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தின் சார்பில் வருகிற 30–ந்தேதி வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்திலும், திருவள்ளூர் மாவட்டம் சார்பில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 2–ந்தேதி பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி கிராமத்திலும் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தின் சார்பில் நடைபெறும் விழாவுக்காக கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் பெஞ்சமின் நேரில் பார்வையிட்டார். பின்னர் விரைவாக பணிகளை முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பெஞ்சமின் கூறும்போது, ‘‘வருகிற 30–ந்தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் சுமார் 1 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

அப்போது அவரிடம், ‘‘இரு அணிகளும் இணையுமா?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர், ‘‘நல்லதே நடக்கும்’’ என்று கூறினார்.

அப்போது அவருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.என்.ராமச்சந்திரன், மரகதம் குமரவேல், மாவட்ட செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா, நகர செயலாளர் கூடுவாஞ்சேரி டி.சீனிவாசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள விழாவுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ள பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் மேடை அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதை அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின், திருவள்ளூர் தொகுதி எம்.பி.வேணுகோபால் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பலராமன், அலெக்சாண்டர் உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘‘விடுபட்டு உள்ள மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ‘நீட்’ தேர்வில் விலக்கு வழங்கப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலத்தில் ‘நீட்’ தேர்வை எதிர் கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது’’ என்றார்.


Next Story