நகை வியாபாரி உள்பட 2 பேரை தாக்கி பணம் பறிப்பு பெண் உள்பட 2 பேர் கைது


நகை வியாபாரி உள்பட 2 பேரை தாக்கி பணம் பறிப்பு பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2017 4:48 AM IST (Updated: 15 Aug 2017 4:48 AM IST)
t-max-icont-min-icon

பழங்கால தங்க நாணயங்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி நகை வியாபாரி உள்பட 2 பேரை தாக்கி பணம் பறித்த வழக்கில் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா, 

சிவமொக்கா டவுன் அசோக்நகரை சேர்ந்தவர் கிரண் சேட். நகை வியாபாரி. இவரை சம்பவத்தன்று சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆனவெட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் சந்தித்து தன்னிடம் பழங்கால தங்க நாணயங்கள் உள்ளதாகவும், அந்த நாணயங்களை விற்பனை செய்ய உள்ளதாகவும், உங்களுக்கு வேண்டும் என்றால் குறைந்த விலைக்கு தங்க நாணயங்களை தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு கிரண் சேட்டும் சம்மதம் தெரிவித்தார். மேலும் கிரண் சேட் தங்க நாணயங்கள் வாங்க உள்ளது பற்றி தனது நண்பரான வீராச்சார் என்பவரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கிரண் சேட்டும், அவரது நண்பர் வீராச்சாரும் நாகராஜை செல்போனில் தொடர்பு கொண்டு தங்க நாணயங்களை வாங்கி கொள்ள வருவதாக தெரிவித்தனர். அப்போது நாகராஜ் தான் சிவமொக்கா தாலுகா ஹாடேனஹள்ளியில் உள்ளேன். அங்கு வந்து என்னிடம் தங்க நாணயங்களை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

பணம் பறிப்பு

இதனை தொடர்ந்து கிரண் சேட்டும், வீராச்சாரும் அங்கு சென்றனர். அங்கு சென்றதும் கிரண் சேட்டிடம் ஒரு தங்க நாணயத்தை நாகராஜ் கொடுத்து உள்ளார். அந்த நாணயத்தை கிரண் சேட் சோதித்து பார்த்த போது அது உண்மையான தங்க நாணயம் என்று தெரியவந்தது. இதையடுத்து நாகராஜிடம் இருந்த தங்க நாணயங்கள் முழுவதையும் வாங்க கிரண் சேட்டும், வீராச்சாரும் முடிவு செய்தனர்.

அப்போது நாகராஜ் என்னிடம் 125 கிராம் தங்க நாணயங்கள் உள்ளன. ரூ.1.20 லட்சம் தந்தால் அந்த தங்க நாணயங்களை தருவதாக கூறியுள்ளார். மேலும் தங்க நாணயங்கள் எனது உறவுக்கார பெண்ணின் வீட்டில் உள்ளது. அங்கு சென்று வாங்கி தருகிறேன் என்று கூறி கிரண் சேட், வீராச்சாரிடம் கூறினார்.

இதையடுத்து ஹாடேனஹள்ளி ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு வீட்டிற்கு கிரண் சேட்டையும், வீராச்சாரையும் அழைத்து சென்ற நாகராஜ் அங்கு சென்றதும், தனது உறவுக்கார பெண் ஒருவருடன் சேர்ந்து கிரண் சேட்டையும், வீராச்சாரையும் தாக்கி ரூ.1.20 லட்சத்தை பறித்தார். இதையடுத்து நாகராஜும், அவரது உறவுக்கார பெண்ணும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

கைது

இதுதொடர்பாக கிரண் சேட் கொடுத்த புகாரின்பேரில் சாகர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜையும், அவரது உறவுக்கார பெண்ணையும் தேடிவந்தனர். இந்த நிலையில் நகை வியாபாரி கிரண் சேட், வீராச்சாரை தாக்கி பணம் பறித்ததாக நேற்று முன்தினம் நாகராஜ் மற்றும் அவரது உறவுக்கார பெண் மீனாட்சி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1.20 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை போலீசார் மீட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

Next Story