குடகு மாவட்டம் துபாரேவில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் போக்குவரத்து ஸ்தம்பித்தது


குடகு மாவட்டம் துபாரேவில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் போக்குவரத்து ஸ்தம்பித்தது
x
தினத்தந்தி 15 Aug 2017 4:52 AM IST (Updated: 15 Aug 2017 4:52 AM IST)
t-max-icont-min-icon

குடகு மாவட்டம் துபாரேவில் நேற்று 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

குடகு,

கர்நாடகத்தில் மலைநாடு என்று அழைக்கப்படும் மாவட்டங்களில் குடகு மாவட்டமும் ஒன்று. மேலும் காவிரியின் பிறப்பிடமாகவும், அதிக மழை பொழியும் இடமாகவும் குடகு மாவட்டம் இருப்பதால் அம்மாவட்டத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இதுமட்டுமல்லாமல் குடகு மாவட்டத்தில் துபாரே யானைகள் முகாம், மடிகேரி, பாகமண்டலா, தலைக்காவிரி, நிஷர்கதாமா-பைல்கொப்பா திபெத் முகாம் ஆகிய சுற்றுலா தலங்களும், மல்லள்ளி, ஷேலாவரா, அப்பி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன.

இதனால் சுற்றுலா பயணிகள் விரும்பும் மாவட்டமாக குடகு இருந்து வருகிறது. மேலும் குடகு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண்பதற்காக தினமும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிவார்கள்.

படகு சவாரி

தற்போது குடகு மாவட்டத்தில் சீசன் களைகட்டியுள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடகு மாவட்டத்திற்கு படையெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று துபாரே யானைகள் முகாமில் மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அங்கு சுற்றுலா பயணிகள் யானைகளை பார்த்தும், காவிரி ஆற்றில் படகு சவாரி, ரப்பர் படகு சவாரி ஆகியவற்றில் ஈடுபட்டும் மகிழ்ந்தார்கள்.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நேற்று துபாரே பகுதியில் குவிந்ததால், அப்பகுதியே போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதற்கிடையே துபாரே பகுதியில் சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதாகவும், அதனால் உடனடியாக சாலையை சீரமைக்க கோரியும் நேற்று அப்பகுதி வியாபாரிகள் சாலையின் நடுவே உள்ள குழியில் வாழை மரக்கன்று ஒன்றை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கைவிட்டனர்

இதுகுறித்து அறிந்த பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது அவர்கள் விரைவில் சாலைகளை சீரமைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் நேற்று துபாரே பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story