தூத்துக்குடியில் லாரி டிரைவர் கொலையில் தந்தை- மகன் கைது பரபரப்பு வாக்குமூலம்


தூத்துக்குடியில் லாரி டிரைவர் கொலையில் தந்தை- மகன் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 16 Aug 2017 3:45 AM IST (Updated: 16 Aug 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் லாரி டிரைவர் கொலையில் தந்தை- மகன் கைது செய்யப்பட்டனர். அதில் மகன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சங்கரபேரியை சேர்ந்த சுப்பையா மகன் அங்குசாமி என்ற ஈசுவரன் (வயது 46), லாரி டிரைவர். இவர் நேற்று காலையில் பண்டாரம்பட்டியில் இருந்து தெற்கு சங்கரபேரி செல்லும் ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சங்கரப்பேரியை சேர்ந்த முனியசாமி, அவருடைய மகன்கள் வேல்ராஜ் என்ற வேல்சாமி (26), மாரிராஜ் என்ற மாரீசுவரன் உள்பட 5 பேர் அங்குசாமியை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வேல்ராஜ் என்ற வேல்சாமியை கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

அங்குசாமிக்கும், எனது தந்தை முனியசாமிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று அங்குசாமி எனது தந்தையுடன் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கினார். இதனால் தப்பிக்க முடியாத நிலையில் தந்தை முனியசாமி ரத்த வெள்ளத்தில் மூச்சை அடக்கி படுத்துக்கொண்டார். அவர் இறந்து விட்டதாக நினைத்து அங்குசாமி அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் எனது தந்தை அங்கிருந்து வந்து நடந்ததை எங்களிடம் தெரிவித்தார்.

இதனால் அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தோம். பின்னர் அங்குசாமியை கொலை செய்ய முடிவு செய்தோம். அப்போது சங்கரப்பேரியில் தனியாக வந்த அங்குசாமியை நானும், என்னுடைய தம்பி மாரிராஜ் என்ற மாரீசுவரன் மற்றும் என்னுடைய உறவினர்கள் 2 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தோம்.

இவ்வாறு போலீசில் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து முனியசாமியையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story