சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன


சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
x
தினத்தந்தி 16 Aug 2017 4:15 AM IST (Updated: 16 Aug 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 71-வது சுதந்திர தினவிழா ஆயுதப்படை மைதானத்தில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசார், தீயணைப்புத்துறையினர், ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு கதர் ஆடைகளை அணிவித்தார்.

தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகம், மருத்துவர்கள், வங்கி மேலாளர்கள், வேளாண்மைத்துறை வேளாண் பொறியியல் துறை. தோட்டக்கலைத்துறை, பள்ளி கல்வித்துறை, நிலஅளவைத்துறை, ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 222 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு போர்ப்பணி ஊக்க மானியமாக ரூ.43 ஆயிரத்து 500-க்கான காசோலைகளையும், வருவாய் துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.98 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு் ரூ.11 ஆயிரத்து 700 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 610 மதிப்பில் சலவை பெட்டிகள் உள்பட மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 47 ஆயிரத்து 664 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள்

தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 9 பள்ளிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவர்கள் பிரமிடு போலவும், பரதநாட்டியம் ஆடியும், பாரதமாதா போல வேடம் அணிந்து வந்தும் பார்வையாளர்களை அசத்தினர். இதில் அறந்தாங்கி உமையாள் ஆச்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், கந்தர்வக்கோட்டை வித்யாவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தன. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கேடயம் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், வருவாய் அதிகாரி ராமசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், ரகுபதி எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர்கள் ஜெயபாரதி, வடிவேல்பிரபு, சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பஞ்சவர்ணம், தாசில்தார் செந்தமிழ்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை நகராட்சி

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் குணசீலன் தேசியகொடியை ஏற்றி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தனலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று சுதந்திர தினவிழாவையொட்டி தேசியகொடி ஏற்றப் பட்டது. 

Related Tags :
Next Story