திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா சிறப்பாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் மலர் காவடிகள் எடுத்து வந்து முருகபெருமானுக்கு செலுத்தி வழிபட்டனர். ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மூலவர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தங்க கவசம், பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் செய்திருந்தனர்.
சிங்கபெருமாள் கோவில்
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலைய சாலையில் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. அங்கு ஆடிகிருத்திகையையொட்டி குளக்கரையில் இருந்து பால்குடங்களை தலையில் சுமந்து வந்த பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். இதையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் மீது மிளகாய்பொடி தூவி அபிஷேகம், பக்தர்கள் மீது மஞ்சள் இடித்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் மாலை வரை தொழிலதிபர் நரசிம்மன் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர்.
அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் ஆடி கிருத்திகை திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பெருங்கருணையில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.
Related Tags :
Next Story