‘மேலூர் கூட்டத்தை பார்த்து திருந்தாதவர்கள் திருத்தப்படுவார்கள்’: டி.டி.வி.தினகரன்
மேலூர் கூட்டத்தை பார்த்து திருந்தாதவர்கள் திருத்தப்படுவார்கள் என்று மதுரையில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
மதுரை,
அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். மதுரையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் அங்கு நேற்று காலை தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் மனைவி, மகளுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.
அவரை மீனாட்சி அம்மன் கோவில் உள்துறை மேலாளர் வரவேற்று அழைத்து சென்றார். பின்னர் அவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சாமி சன்னதிக்கு சென்று சாமி கும்பிட்டார். தொடர்ந்து அவர் கோவிலுக்கு வெளியே உள்ள மதுரை வீரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு அதிக தொண்டர்கள் வந்திருந்தார்கள். இந்த பொதுக் கூட்டம் ஒரு தொடக்கம் தான். அந்த தொண்டர்கள் கூட்டத்தை பார்த்து தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன். அப்படி திருந்தாதவர்கள் கண்டிப்பாக திருத்தப்படுவார்கள்.
தொடர்ந்து இதுபோன்ற கூட்டம் நடத்தி கட்சி பலப்படுத்தப்படும். இந்த பயணம் தொடரும். மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் வரை எனக்கு ஓய்வு, உறக்கம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.