71-வது சுதந்திர தின விழா: மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் கொண்டாட்டம்
நமது நாட்டின் 71-வது சுதந்திர தினம் சென்னையில் உள்ள மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை,
நமது நாட்டின் 71-வது சுதந்திர தின விழா, சென்னையில் உள்ள மத்திய-மாநில அரசு அலுவலங்களில் தேசிய கொடி ஏற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் துணை கவர்னர் வைரல் வி.ஆச்சார்யா தேசிய கொடி ஏற்றினார். நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி முதன்மை கமிஷனர் அலுவலகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி முதன்மை கமிஷனர் சி.பி.ராவ் தேசிய கொடி ஏற்றினார்.
அண்ணா நகரில் உள்ள ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறை அலுவலகத்தில், ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி கமிஷனர் ஜி.ரவீந்திரநாத், அண்ணா நகர் மேற்கு விரிவாக்க பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. கமிஷனர் மற்றும் மத்திய கலால் வரி (தணிக்கை பிரிவு) அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி (தணிக்கை பிரிவு) கமிஷனர் எஸ்.திருநாவுக்கரசு ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
பெருநகர சென்னை மாநகராட்சி
ராஜாஜி சாலையில் உள்ள சுங்கவரித்துறை (துறைமுகம்) கமிஷனர் அலுவலகத்தில் தலைமை கமிஷனர் எம்.அஜித்குமாரும், தேனாம்பேட்டையில் உள்ள முதன்மை பொது கணக்கு அலுவலகத்தில், முதன்மை பொது கணக்கு அதிகாரி தேவிகா நாயர் ஆகியோரும் தேசிய கொடியை ஏற்றினர். சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில், அதன் தலைவர் பி.ரவீந்திரன் தேசிய கொடி ஏற்றினார்.
அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் எல்.ஐ.சி.யின் தென்மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் தேசிய கொடி ஏற்றினார்.
ரிப்பன் கட்டிடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றினார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
தேர்தல் ஆணையம்- கலெக்டர் அலுவலகம்
கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் அருகே உள்ள மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில் மாநில தேர்தல் கமிஷனர் எம்.மாலிக் பெரோஸ் கான் தேசிய கொடி ஏற்றினார். மாநில தேர்தல் ஆணைய செயலாளர் த.சு.ராஜசேகர் உள்பட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தேசிய கொடி ஏற்றினார். பதிவாளர் பேராசிரியர் டாக்டர் டி.பாலசுப்பிரமணியன், துறைத்தலைவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் தேசிய கொடி ஏற்றினார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சங்கீதா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாநில இடைநிலை கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி ஏற்றினார்.
போக்குவரத்துக்கழகம்
பல்லவன் இல்லத்தில் மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனர் வீ.கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடி ஏற்றினார். மேலும் மாநகர் போக்குவரத்துக்கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிக மதிப்பெண்கள் எடுத்த அவர்களின் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வீ.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
பல்லவன் இல்லத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் அதன், நிதி ஆலோசகரும், தலைமை கணக்கு அதிகாரியுமான எம்.பத்மா தேசிய கொடி ஏற்றினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகளையும் வழங்கி அவர் கவுரவித்தார்.
இந்தியன் வங்கி
ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில், அதன் மேலாண் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கிஷோர் கராட் தேசிய கொடி ஏற்றினார்.
இதேபோல வங்கியின் 111-வது நிறுவன தின நாளும் கொண்டாடப்பட்டது. இந்தியன் வங்கியின் உதவி பொதுமேலாளர் (பாதுகாப்பு) ஏ.சி.செரியன் உள்பட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story