ஈரோட்டில் சுதந்திர தினவிழா: கலெக்டர் பிரபாகர் தேசியக்கொடி ஏற்றினார்
ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதையொட்டி ரூ.49½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
ஈரோடு,
இந்திய சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மைதானம் முழுவதும் வண்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கான முன்ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டு இருந்தன. ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வீட்டில் இருந்து வ.உ.சி. பூங்கா மைதானம் வரை காவல்துறை மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார்.
அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஆர்.டி.ஓ. நர்மதாதேவி ஆகியோர் வரவேற்றனர். மைதான நுழைவு வாயிலில் இருந்து கொடி மேடைக்கு அக்ரஹாரம் கிறிஸ்துஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 35 பேர் பேண்டு வாத்தியம் இசைத்து கலெக்டர் உள்பட அதிகாரிகளை அழைத்து வந்தனர்.
கொடிமேடையில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது அவர் தேசியக்கொடிக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தினார். அவருடன் இருந்த அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்களும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள். அப்போது காவல்துறை வாத்தியக்குழுவினர் தேசியகீதத்தை இசைத்தனர். சுதந்திரத்தை பறைசாற்றும் வகையில் கலெக்டர் பிரபாகர் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் எஸ்.பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டனர். ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவ–மாணவிகளும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கொடி மேடைக்கு வந்தனர்.
ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. போலீசார் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுத்து கம்பீரமாக நடந்து சென்று மரியாதை செலுத்தினார்கள். கலெக்டர் பிரபாகர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரபோராட்ட தியாகிகள், அவர்களின் குடும்பத்தினருக்கும், மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிறப்பாக பணியாற்றிய போலீசார், வருவாய்த்துறையினர், கல்வித்துறையினர் உள்பட பல்வேறு அரசுத்துறையினருக்கு கலெக்டர் எஸ்.பிரபாகர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் போலீசார் 67 பேர், தீயணைப்பு துறையினர் 7 பேர், வருவாய்த்துறையினர் 26 பேர், பள்ளிக்கல்வித்துறையினர் 12 பேர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையினர் 14 பேர், கால்நடை பராமரிப்புத்துறையினர் 14 பேர் மற்றும் தனியார் தொண்டு அமைப்பு உள்பட மொத்தம் 207 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்காக முயற்சி எடுத்த ஈரோடை அமைப்புக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை டாக்டர் சுதாகர், டாக்டர் பிரதீபா சுதாகர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விளையாட்டு துறை சார்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கும் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதுபோல் வருவாய்த்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, தாட்கோ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகியன சார்பில் 79 பேருக்கு ரூ.49 லட்சத்து 62 ஆயிரத்து 638 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு, கடன் உதவி, விலையில்லா இஸ்திரி பெட்டி, 3 சக்கர சைக்கிள் ஆகியன வழங்கப்பட்டன.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டல் வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு ஜனனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூரப்பாளையம் நந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சீனாபுரம் ரிச்மாண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 11 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 1,405 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
அவர்கள் தேசப்பற்றை வளர்க்கும் பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். குறிப்பாக செந்தமிழ் நாடு, கிராமிய நடனம், கலாம் சலாம், சாலை பாதுகாப்பு பாடல், வந்தே மாதரம் உள்ளிட்ட பாடல்களின் நடனம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அரசு விளையாட்டு விடுதி மாணவிகள் ஜிம்னாஸ்டிக் செய்து அசத்தினார்கள்.
விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் அவருடைய மனைவி டாக்டர் ஷர்மிளா பிரபாகர், குழந்தைகள் பிரகல்யா, ஹரிவர்ஷன் ஆகியோருடன் கலந்து கொண்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் அவருடைய மனைவி ஸ்ரீவித்யா சிவக்குமார், மகன்கள் சிவ சரண், சிவ சூர்யா ஆகியோருடன் வந்து கலந்து கொண்டார்.
விழாவில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த மோனிகா, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த அலெக்ஸ் ஆகியோர் சுதந்திர தினவிழாவை பார்வையிட வந்தனர். சுதந்திரதின விழா நிகழ்ச்சிகளை முழுமையாக கண்டு ரசித்த வெளிநாட்டினருக்கு கலெக்டர் பிரபாகர் சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார். கல்லூரி மாணவ–மாணவிகளான அவர்கள் இந்திய கலாசாரத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக வந்துள்ளனர்.
விழாவில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜவேலு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேனகா, மாவட்ட நலப்பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் கனகாசலகுமார், தொழில் அதிபர்கள் எஸ்கேஎம்.மயிலானந்தன், நவநீதகிருஷ்ணன், ஒளிரும் ஈரோடு தலைவர் அக்னி எம்.சின்னசாமி, தாசில்தார் ஜெயக்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி விக்னேஷ், உதவி அதிகாரி ராம்குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.