திண்டுக்கல்லில் சுதந்திர தினவிழா: ரூ.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


திண்டுக்கல்லில் சுதந்திர தினவிழா: ரூ.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x

திண்டுக்கல்லில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் டி.ஜி.வினய் தேசிய கொடியை ஏற்றி வைத்து, ரூ.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் டி.ஜி.வினய் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர் சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்களை பறக்கவிட்டார்.

மேலும், திறந்த ஜீப்பில் சென்றபடி போலீஸ், ஊர்க்காவல்படை, தேசிய பசுமைப்படை யினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று கலெக்டர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் முருகன், சுரேஷ்குமார், பாலமுருகன், வினோதா, பேபி மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் என 25 பேருக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மல்லிகா உள்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கும் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் வருவாய்த்துறை சார்பில் 50 பேருக்கு வீட்டுமனை பட்டா, 3 பேருக்கு திருமண உதவித்தொகை, 63 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை, இயற்கை மரணம் அடைந்த 7 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம், முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியாக 3 பேருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது.

வேளாண்மைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.92 ஆயிரம் விதை மானியத்தொகை, தோட்டக்கலைத்துறை சார்பில் 8 பேருக்கு ரூ.28 லட்சத்து 27 ஆயிரம், தொழில் வணிகத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.29 லட்சத்து 20 ஆயிரம் கடன்உதவி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 2 பேருக்கு ரூ.8 லட்சம் கடன்உதவி, சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 3 பேருக்கு ரூ.77 ஆயிரம் உள்பட மொத்தம் 152 பயனாளிகளுக்கு ரூ.86 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இறுதியில் திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித லூர்தன்னை மேல்நிலைப்பள்ளி, பண்ணை மெட்ரிக் பள்ளி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தேசபக்தி, தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப்புறக்கலைகளை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் இருந்தன. இதில் பங்கேற்ற பள்ளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் தலைமை தாங்கி, தேசியகொடியை ஏற்றினார். இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி உமாமகேஸ்வரி, மகளிர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிபதி அசோகன் உள்பட நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் திண்டுக்கல் மாநகராட்சியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நகர்நல அலுவலர் அனிதா, பொறியாளர் கணேசன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், பொதுமேலாளர் தனுஷ்கோடி ராமலிங்கம் தேசிய கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் 12 டிரைவர்கள், 12 கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்கள், பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் பதவி உயர்வு மற்றும் பணி நிரந்தரம் பெற்ற 47 பேருக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார். இதில் துணை மேலாளர் கணேசன், கோட்ட மேலாளர்கள் கோபாலகிருஷ்ணன், பாண்டியராஜன், மற்றும் உதவி மேலாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story