வயநாடு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்


வயநாடு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்
x
தினத்தந்தி 16 Aug 2017 5:12 AM IST (Updated: 16 Aug 2017 5:12 AM IST)
t-max-icont-min-icon

வயநாடு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

வயநாடு,

வயநாடு மாவட்டம் பொழுதனா 6–ம் மைல் பகுதியை சேர்ந்தவர் ஹனீபா. விவசாயி. இவருக்கு வீட்டருகே சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து அப்பகுதி மக்கள் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சம்பவத்தன்று அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றனர்.

அப்போது கிணற்றில் சிறுத்தை ஒன்று விழுந்து கிடப்பதை பார்த்தனர். 20 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் குறைந்தளவே தண்ணீர் இருந்தது. தண்ணீரில் நீந்தியபடி மேலே வர முடியாமல் சிறுத்தை தவித்தது. இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்பது குறித்து ஆலோசித்தனர். பின்னர் ஒரு கூண்டை கிணற்றுக்குள் இறக்கி சிறுத்தையை மீட்க முடிவு செய்தனர். இதையடுத்து கயிறுகட்டி பெரிய கூண்டு ஒன்றை கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் சிறுத்தை கூண்டுக்குள் சென்றவுடன் கூண்டை மூடிய வனத்துறையினர் மேலே எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுத்தையை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று வனத்துறையினர் விட்டனர். கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைக்கு 7 வயது இருக்கும் என்றும், ஊருக்குள் வந்தபோது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து இருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story