பல்லடம் அருகே, டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்
பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாணிக்காபுரம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று கிராம சபைக்கூட்டம் அங்குள்ள கருப்பராயன் கோவில் வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கிராம சபை கூடுதல் கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திலட்சுமி, ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள வந்தனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார். அப்போது அந்த பகுதி மக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் அப்போதுதான் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்வோம் என்று கூறி அங்கிருந்து வெளியேறினார்கள்.
பின்னர் மாணிக்காபுரத்தில் டாஸ்மாக் கடை திறந்ததை கண்டித்து மாணிக்காபுரம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தை மதுபானக்கடையை மூடும் வரை கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்போம் வந்தே மாதரம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்த தகவல் பல்லடத்தில் உள்ள கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகவதிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு வந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் மாணிக்காபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் அப்போதுதான் நாங்கள் கிராம சபைக்கூட்டத்தில் கலந்துகொள்வோம் என்று கூறிவிட்டு சென்றனர்.