மரக்கன்றுகள் நட விருப்பம் உள்ளவர்கள் இன்று பெயர் பதிவு செய்யலாம்


மரக்கன்றுகள் நட விருப்பம் உள்ளவர்கள் இன்று பெயர் பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 16 Aug 2017 3:33 PM IST (Updated: 16 Aug 2017 3:33 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மரக்கன்று நட விருப்பம் உள்ளவர்கள் இன்று பெயர் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

இது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பெருவாரியான மரம் நடுதல் என்ற திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான குழிகள் ஏற்கனவே தோண்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மரக்கன்றுகள் நடும் பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பயனாளிகள் கொண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும் வனத்துறை சார்பாக ஒரு லட்சம் விதைப்பந்துகளும் பள்ளிக் கல்வித்துறை சார்பாக 20 ஆயிரம் விதைப்பந்துகளும் அடி அண்ணாமலை ஊராட்சியின் குக்கிராமமான கோசாலை வனப்பகுதியில் தூவப்படுகிறது.

மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் பங்கேற்பதற்கு ஆர்வம் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இத்திட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பினை அளிக்கலாம்.

இந்த திட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஆகியோரை அணுகி தங்களது பெயர்களை இன்று (புதன்கிழமை) பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படும் இத்திட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story