அங்கன்வாடி மைய மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது


அங்கன்வாடி மைய மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 17 Aug 2017 4:15 AM IST (Updated: 17 Aug 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

பூதலூர் அருகே அங்கன்வாடி மைய மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது. இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள ஆவாரம்பட்டி கிராமத்தில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 20 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்கள் இந்த அங்கன்வாடி மையத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை இந்த மையத்தை ஊழியர்கள் திறக்க வந்தனர். அப்போது அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே சிதறி விழுந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கன்வாடி மைய ஊழியர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளை அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் அமர வைத்து வேறு இடத்தில் வைத்து சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்கப் பட்டது.

விடுமுறை

தஞ்சை மாவட்டம் பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. மழையால் சேதமடைந்திருந்த இந்த கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்துள்ளது. மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்த போது அங்கன்வாடி மையத்துக்கு விடுமுறை என்பதால் குழந்தைகள் அங்கு இல்லை. இதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தற்போது ஆவாரம்பட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு வேறு இடத்தில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story