சென்னையில் அரசு பஸ் டிரைவரிடம் ஸ்கூட்டர் திருடிய வாலிபர், போலீஸ் வாகன சோதனையில் சிக்கினார்


சென்னையில் அரசு பஸ் டிரைவரிடம் ஸ்கூட்டர் திருடிய வாலிபர், போலீஸ் வாகன சோதனையில் சிக்கினார்
x
தினத்தந்தி 17 Aug 2017 2:45 AM IST (Updated: 17 Aug 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அரசு பஸ் டிரைவரிடம் ஸ்கூட்டர் திருடிய வாலிபர், போலீஸ் வாகன சோதனையின்போது சிக்கினார்.

சென்னை,

சென்னை சொசப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரியும் இவர், கடந்த 3-ந் தேதி அதிகாலை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் தனது ‘ஹோண்டா ஆக்டிவா’ ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். ஈ.வெ.ரா. சாலை சந்திப்பு சிக்னலை அவர் கடந்தபோது, இளம்பெண் ஒருவர், தனது தங்கச்சங்கிலியை 2 பேர் பறித்துக் கொண்டு ஓடுவதாக கூச்சலிட்டார்.

அவருக்கு உதவ முயன்ற கிருஷ்ணமூர்த்தி, ஈ.வெ.ரா. சாலையில் ஓடிக் கொண்டிருந்த 2 வாலிபர்களை ஸ்கூட்டரில் துரத்தியபடி சென்றார். அவர்கள் 2 பேரும் ரித்தர்டன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். ஆனால், அந்த மோட்டார் சைக்கிள் ‘ஸ்டார்ட்’ ஆகாததால், அதை அங்கேயே போட்டுவிட்டு, பின்னால் துரத்திக் கொண்டு வந்த கிருஷ்ணமூர்த்தியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது ஸ்கூட்டரை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

வாகன சோதனை

இதனால், அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி திரும்பி வந்து பார்த்தபோது, தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடியதாக கூறிய பெண்ணையும் காணவில்லை.

இதுகுறித்து, அவர் வேப்பேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு துரைப்பாக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த வாலிபர் ஒருவர், போலீசை பார்த்ததும் அதை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். அப்போது நடந்த வாகன சோதனையை வீடியோவில் போலீசார் பதிவு செய்து கொண்டிருந்ததால், அதை போட்டு பார்த்து, தப்பியோடிய வாலிபரின் உருவத்தை பிரதி எடுத்தனர். பின்னர், அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் அந்த புகைப்படத்தை அனுப்பி வைத்தனர்.

கைது

அப்போது, சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கு ஒன்றில் தேடப்படும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த சிவகுமார் (வயது 21) தான் அது என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து, செம்மஞ்சேரிக்கு சென்ற சேத்துப்பட்டு போலீசார், அங்கு தலைமறைவாக இருந்த சிவகுமாரை கைது செய்தனர்.

அதே நேரத்தில், துரைப்பாக்கத்தில் வாகன சோதனையின்போது, சிவகுமார் போட்டுவிட்டு சென்ற ஸ்கூட்டரும் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது, அது வேப்பேரியில் திருடுபோன கிருஷ்ணமூர்த்தியின் ஸ்கூட்டர் என்பது தெரியவந்தது.

தீவிர விசாரணை

இதுகுறித்து, சிவகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, ஸ்கூட்டரை திருடும்போது, அவருடன் வந்தவரின் பெயர் சுரேஷ் என்பது தெரியவந்தது. ஆனால், அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரியவந்தது.

அதே நேரத்தில், தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியதாக கூறிய பெண்ணுக்கும், இந்த வாலிபர்களுக்கும் இடையே தொடர்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story