எழும்பூர் கோர்ட்டில் நடிகை சுஷ்மிதா சென் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


எழும்பூர் கோர்ட்டில் நடிகை சுஷ்மிதா சென் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Aug 2017 3:30 AM IST (Updated: 17 Aug 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

வருகிற செப்டம்பர் 18-ந் தேதி எழும்பூர் கோர்ட்டில் நடிகை சுஷ்மிதா சென் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென், கடந்த 2005-ம் ஆண்டு ‘லேண்ட்குரூசர்’ என்ற வெளிநாட்டு சொகுசு காரை ரூ.55 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினார். இந்த கார், 2004-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழைய கார் என்று சென்னை துறைமுகத்தில் கூறி, வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

அதில், இந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த மும்பையை சேர்ந்த ஹரன், வாசு பண்டாரி தமலா ஆகியோர் மீது குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

பிடிவாரண்டு

இதற்கிடையில், தான் வாங்கிய காருக்கு ரூ.20 லட்சம் வரியை சுஷ்மிதா சென் செலுத்தி விட்டார். மேலும், இந்த வழக்கில் அவர், சுங்கத்துறையினரின் (அரசு தரப்பு) சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் எழும்பூர் கோர்ட்டில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்து விட்டார்.

இந்தநிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் தரப்பில் சுஷ்மிதாவிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக, அவரை நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, சுஷ்மிதா சென்னுக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சுஷ்மிதா சென் வழக்கு தொடர்ந்தார்.

ஆஜராகவேண்டும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எழும்பூர் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டுக்கு ஏற்கனவே தடை விதித்து உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சுஷ்மிதா சென் சார்பில் ஆஜரான வக்கீல், ‘வருகிற 18-ந் தேதி குறுக்கு விசாரணைக்காக சுஷ்மிதா சென் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராவார்’ என்று கூறினார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, ‘செப்டம்பர் 18-ந் தேதி சுஷ்மிதா சென், எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகவேண்டும். அன்றே அவரிடம் குறுக்கு விசாரணையை செய்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார். 

Next Story