‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்’ என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75–வது ஆண்டு விழா தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இன்றைய சூழலில் மக்கள் மாற்று சக்தியாக பாரதீய ஜனதா கட்சிதான் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசியல் சூழ்நிலை எப்படி மாறினாலும், ஊழலற்ற தன்மையை மக்கள் பாரதீய ஜனதாவிடம் இருப்பதாக உணர்கிறார்கள். பாரதீய ஜனதா பின்புறம் வழியாகவோ, பின்புலம் வழியாகவோ நுழையவேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
அரசு கட்சி பிரச்சினையை பார்ப்பதை விடுத்து, மக்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்தி முதல்–அமைச்சர் ஆக நினைக்கிறார். கருத்துகளுக்காக பதில் சொல்லும் அரசியல்வாதியை விட, காருக்காக கருத்து சொல்லும் அரசில்வாதியாக நாஞ்சில் சம்பத் இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் பாயிண்ட் மணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.