விருதுநகரில் பஸ்–கார் மோதல்: குடிநீர் வாரிய என்ஜினீயர்கள் உள்பட 3 பேர் பலி


விருதுநகரில் பஸ்–கார் மோதல்: குடிநீர் வாரிய என்ஜினீயர்கள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 31 Aug 2017 5:00 AM IST (Updated: 31 Aug 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் தடுப்புச்சுவரை தாண்டிச் சென்ற கார் எதிரே வந்த பஸ் மீது மோதியதில், 2 குடிநீர் வாரிய என்ஜினீயர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். மற்றொரு என்ஜினீயர் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர்,

சிவகங்கை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் உதவி நிர்வாக என்ஜினீயர்களாக வேலை பார்த்தவர்கள் மேரி யாழினி(வயது 54), கலைச்செல்வன்(54). உதவி என்ஜினீயராக வேலை பார்த்தவர் சுப்பிரமணியன்(52).

இவர்கள் 3 பேரும் நெல்லையில் குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை என்ஜினீயர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள காரில் சென்றனர். காரை பன்னீர்செல்வம்(60) என்பவர் ஓட்டினார். இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டி வந்தார்.

நேற்று மாலை நெல்லையில் இருந்து இவர்கள் காரில் சிவகங்கைக்கு திரும்பி கொண்டிருந்தனர். விருதுநகர் காவேரி நகர் அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நான்குவழிச்சாலை தடுப்புச்சுவரை தாண்டி எதிரே வந்து கொண்டிருந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் மீது மோதியது.

இந்த பஸ்சில் 50 என்ஜினீயரிங் மாணவ–மாணவிகள் இருந்தனர். இந்த பஸ்சை விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த ஜேசுராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.

பஸ் மீது கார் மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கார் டிரைவர் பன்னீர்செல்வம் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த உதவி நிர்வாக என்ஜினீயர் மேரி யாழினி ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரின் பின் இருக்கையில் இருந்த மற்றொரு உதவி நிர்வாக என்ஜினீயர் கலைச்செல்வன், உதவி என்ஜினீயர் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரையும் மீட்டு போலீசார் உடனடியாக சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் கலைச்செல்வன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சுப்பிரமணியன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் இறந்த மேரி யாழினி காரைக்குடியை சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் அருள் செல்வராஜ்.

விபத்தில் பலியான என்ஜினீயர் கலைச்செல்வனும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுப்பிரமணியனும் மதுரை செல்லூரை சேர்ந்தவர்கள். டிரைவர் பன்னீர்செல்வம் சிவகங்கையை சேர்ந்தவர். விபத்து குறித்து தகவலறிந்த விருதுநகர் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் விபத்து நடந்த இடத்திற்கு வந்து போலீசாரின் மீட்பு பணிக்கு உதவினர்.

இந்த விபத்து குறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் மதுரை–விருதுநகர் சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story