ஒருதலைக்காதலால் விபரீதம்: கையை பிளேடால் அறுத்து, தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


ஒருதலைக்காதலால் விபரீதம்: கையை பிளேடால் அறுத்து, தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 31 Aug 2017 5:30 AM IST (Updated: 31 Aug 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே ஒருதலைக்காதலால் கையை பிளேடால் அறுத்து தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் குசேலன் நகரை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மகன் அஜித்குமார் (வயது 21). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அஜித்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டார். பின்னர் வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அதன்பின்னர் வீட்டில் அனைவரும் தூங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை உறவினர்கள் அஜித்குமாரை காணாததால் தேடிப்பார்த்தார்கள். அப்போது அவர் அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்தில் உள்ள புங்கன் மரத்தில் தனது பேண்ட்டில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மேலும் அவர் தனது வலது கையை பிளேடால் அறுத்துள்ளதால் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது.

இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அஜித்குமார் அதே ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது விருப்பத்தை தெரிவித்தும் காதலை ஏற்க அந்த பெண் மறுத்ததால் மனமுடைந்து பிளேடால் கையை அறுத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Next Story