டி.டி.வி. தினகரன் விரைவில் பொதுக்குழுவை கூட்டுவார் திவாகரன் பேட்டி


டி.டி.வி. தினகரன் விரைவில் பொதுக்குழுவை கூட்டுவார் திவாகரன் பேட்டி
x
தினத்தந்தி 31 Aug 2017 5:00 AM IST (Updated: 31 Aug 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி. தினகரன் விரைவில் பொதுக்குழுவை கூட்டுவார் என மன்னார்குடியில் சசிகலா சகோதரர் திவாகரன் கூறினார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் 37 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை. இதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும். மைனாரிட்டி அரசாக மாறிவிட்ட இந்த அரசு தற்போது முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டுவருவதாக தகவல்கள் வருகின்றன. இதில் தமிழக கவர்னர் உடனடியாக தலையிட்டு மைனாரிட்டி அரசுக்கு கடிவாளம் போட வேண்டும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதையும், கொள்கை முடிவுகள் எடுப்பதையும், உயர் அதிகாரிகள் மாற்றப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

முதல்-அமைச்சருக்கு ஆதரவில்லை என 19 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் மூலம் தெரிவித்தபிறகு, சட்டபடி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியது கவர்னரின் கடமை. அதில் இருந்து அவர் விலகியிருக்கிற நிலையில் எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பர்.

பொதுச்செயலாளர் நடத்துவது தான் உண்மையான பொதுக்குழு கூட்டம். எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் அணியினர் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை. அதை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. டி.டி.வி. தினகரன் சார்பில் அதிகாரபூர்வமான பொதுக்குழு விரைவில் நடத்தப்படும் அதற்கான இடம். நாள் விரைவில் அறிவிக்கப் படும்.

நீங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. மீறி ஈடுபட்டால் உங்கள் மீதும், உங்கள் மகன் மீதும் வழக்குகள் போடுவோம் என்று போனில் ஒருவர் மிரட்டினார். நீங்கள் வழக்கு போடுங்கள், நாங்கள் சட்டப்படி பார்த்து கொள்கிறோம் என்று கூறிவிட்டேன். வக்கீலுடன் ஆலோசித்து அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது டி.டி.வி தினகரனால் திருவாரூர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Next Story