பள்ளி மாணவிகள் 2 பேரின் திருமணம் தடுத்து நிறுத்தம்


பள்ளி மாணவிகள் 2 பேரின் திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Sept 2017 3:00 AM IST (Updated: 31 Aug 2017 8:17 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே நடக்க இருந்த 2 பள்ளி மாணவிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

காட்பாடி,

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அரும்பருதி கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், அங்குள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், திருமண வயதை எட்டாத அந்த மாணவிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்தனர். காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று (31–ந் தேதி) திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளும் படுஜோராக நடந்து வந்தது.

இந்த நிலையில் திருமண வயதை எட்டாத பள்ளி மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்ஸ்சாண்டர் தலைமையிலான போலீசாரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் நேற்று காலையில், பிரம்மபுரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர். திருமணத்திற்கு மாப்பிள்ளை தயாராகிக் கொண்டிருந்தார். அந்த சிறுமிக்கு உறவினர்கள் மணப்பெண் அலங்காரம் செய்திருந்தனர். திருமணத்தை காண உறவினர்களும் மண்டபத்தில் குவிந்திருந்தனர்.

அதிகாரிகள் மற்றும் போலீசார் வருகையால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் இரு குடும்பத்தினரையும் அழைத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்றும், இதனால் ஏற்படும் பிரச்சினைகள், சட்டம் குறித்து எடுத்துரைத்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இதேபோல், காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ்–2 படித்து வருகிறார். இந்த மாணவிக்கு வருகிற 3–ந் தேதி திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்தனர்.

இதையறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு மாணவியின் பெற்றோரை சந்தித்து, 18 வயது நிரம்பாமல் திருமணம் செய்யக்கூடாது. மீறி திருமணம் நடத்தினால், நீங்கள் (பெற்றோர்), மாப்பிள்ளை உள்பட இரு தரப்பினர் மீதும் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

18 வயதை அந்த பெண் அடைந்தபிறகு அந்த பெண்ணின் சம்மதத்தை பெற்றபின் திருமணம் செய்து வைக்குமாறு எடுத்து கூறினர். அப்போது அதிகாரிகளுக்கும், பெண் வீட்டினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சமரசமடைந்த மாணவியின் பெற்றோர் திருமணத்தை நிறுத்துவதாக கூறினர். திருமண ஏற்பாடும் நிறுத்தப்பட்டது.

காட்பாடி பகுதியில் நடக்க இருந்த மாணவிகளின் திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story