திருவண்ணாமலையை வளர்ச்சி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன்
திருவண்ணாமலை மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே கடலூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சியின் உதவி ஆணையாளராக (கல்வி) பணியாற்றி வந்த கே.எஸ்.கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டராக கே.எஸ்.கந்தசாமி நேற்று காலை 10–45 மணியளவில் பொறுப்பேற்று கொண்டார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருவண்ணாமலை மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன். மாவட்டத்தை சுத்தமாக வைத்து கொள்ள பாடுபடுவேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள், சுற்றுலாவினர் ஏராளமானோர் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும்.தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் திருவண்ணாமலையில் செயல்படுத்தப்படும். நடைமுறையில் செயல்பட்டு வரும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும். பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது முதல் முறையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி தேன்மொழி, டாக்டர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இவர் திருவாரூர் மாவட்டத்தில் உதவி கலெக்டர் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உதவி கலெக்டராக பணியாற்றி உள்ளார். சுனாமி பேரிடரின் போது நாகை மாவட்டத்தில் மறுசீரமைப்பு கண்காணிப்பு அலுவலராக பணியாற்றியுள்ளார். சென்னை வர்த்தக மைய நிர்வாக இயக்குனராகவும், சென்னையில் நில நிர்வாகப்பிரிவின் இணை ஆணையாளராகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (கல்வி) பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Related Tags :
Next Story