கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் பா.ஜ.க. தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது


கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் பா.ஜ.க. தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது
x
தினத்தந்தி 1 Sept 2017 4:45 AM IST (Updated: 1 Sept 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் பா.ஜ.க. தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குளச்சல் துறைமுகம், அப்பகுதியை சேர்ந்த மீனவர் களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலை, ரெயில் பாதை வசதிகளுடன் விரைவாக அமைக்கப்படும். தமிழகத்தில், கடந்த 50 ஆண்டு காலமாக நேர்மையான ஆட்சி நடைபெறவில்லை. தி.மு.க. தற்போது புனித கட்சியாக காட்டி வருகிறது. தி.மு.க. புறவாசல் வழியாக ஆட்சி அமைக்க பார்க்கிறது. மக்களை சந்திக்கும் போது, அதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் ஊழலைப் புகுத்தி, ஊழல் சந்தையாகமாற்றியது தி.மு.க.தான்.அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினைகளை சரி செய்து கொண்டு நிலைத்த, நீடித்த அரசாக அமைவது நல்லது. புறவாசல் வழியாக வருவதற்கு, தி.மு.க.வை போல் பாரதீய ஜனதா கட்சி செயல்படாது. எந்த கட்சியையும் பிரித்து, அதில் ஆதாயம் தேடுவதற்கு பா.ஜ.க. தயாராக இல்லை.

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையில் பா.ஜ.க. தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலைத்திட்டத்தில் 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு கடற்கரை சாலை திட்ட பணிகள் புதுச்சேரி வரை நடைபெற்றுள்ளது. எல்லை பிரச்சினையில் வாஜ்பாய் யுத்தம் நடத்தி சாதித்தார். ஆனால், பிரதமர் மோடி மவுனமாக இருந்து கொண்டு சாதித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் என்னைப் பற்றியோ, பா.ஜ.க. தலைவர்கள் பற்றியோ பேசியிருந்தால், நான் பதில் கூறுவேன். மற்றபடி கமல்ஹாசனை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.சிவசுப்ரமணியம் உடனிருந்தார்.

பெரம்பலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை பார்ப்பது அரசியலுக்காகவும், சுயநலத்துக்கும் தான். தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு தான் ஆகிறது, தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர் என்றார்.

Next Story