தினகரனுக்கு, கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி


தினகரனுக்கு, கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
x
தினத்தந்தி 1 Sept 2017 4:45 AM IST (Updated: 1 Sept 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

தினகரனுக்கு கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்று ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு,

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 6–ந்தேதி ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை ஒளிபரப்புவதற்காக திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து பெரிய எல்.இ.டி. திரை வசதியுடைய வாகனங்கள் ஈரோட்டிற்கு வரவழைக்கப்பட்டன. ஈரோட்டில் உள்ள ஒரு வாகனத்துடன் சேர்த்து மொத்தம் 6 வாகனங்களின் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் சிறப்பாக நடத்துவதற்கு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். பெருந்துறை அருகே பெரியவீரசங்கிலியில் உள்ள கோழிப்பண்ணையில் ஈக்கள் மொய்ப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் வந்தது. அங்கு மருந்து தெளித்து ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஈக்கள் தொல்லை அதிகரித்தால் பண்ணையின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதற்காக தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக சாய, சலவை பட்டறைகள், தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதில்லை. கழிவுநீர் வெளியேற்றுவது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க.வில் 2 அணிகளும் இணைந்த பிறகு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அதைத்தான் கவர்னரும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும் கூறி உள்ளனர். டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தில் எந்தவொரு எம்.எல்.ஏ.க்களும் பேசவில்லை.

2 அணிகள் இணைந்ததைபோல் அ.தி.மு.க. ஒரே அணியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தையை கட்சியின் மேலிடம் நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேனகா, சிந்தாமணி தலைவர் சூரம்பட்டி ஜெகதீசன், மாவட்ட மக்கள் செய்தி தொடர்புத்துறை அதிகாரி விக்னேஷ், உதவி அதிகாரிகள் ராம்குமார், கலைமாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த 6 வாகனங்களும் ஈரோடு மாவட்டத்தின் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும். மேலும், வருகிற 6–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நூற்றாண்டு விழா காட்சிகள் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


Next Story