எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது திவாகரன் பேட்டி
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது என்று ஈரோட்டில் திவாகரன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருடைய இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சசிகலாவின் சகோதரரான திவாகரன் ஈரோட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார்.
அவர் ஈரோடு பழையபாளையத்தில் உள்ள சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் நேற்று காலை கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் திருமண மண்டபத்தைவிட்டு வெளியே வந்த திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து மனு கொடுத்து உள்ளனர். ஆனால் அந்த மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர் சட்டசபையை கூட்டாமல் இருக்கிறார். 19 எம்.எல்.ஏ.க்களை தவிர மேலும் 48 எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர்.
முதல்–அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா மிகப்பெரிய சக்தி வாய்ந்தவர். அவர் சிறப்பான ஆட்சியை கொடுத்தார். ஆனால் தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த நிர்வாகியாக இருந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் அவரால் வழிநடத்த முடியாது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழ நாட்கள் எண்ணப்படுகிறது. தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் முதல்–அமைச்சராக வரவேண்டும். அப்போது கட்சி பிரச்சினை, ஆட்சி பிரச்சினை ஓய்ந்துவிடும்.
இந்த ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. கட்டுமான வேலைக்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 24 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது. சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ரூ.2 லட்சம், வனத்துறையில் மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட உயர் பதவிகளின் பணியிட மாறுதலுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே போகலாம். முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர், 5 மூத்த அமைச்சர்கள் ஆகியோர் ஊழலில் மூழ்கி இருக்கிறார்கள்.
கடந்த 63 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி தமிழக அரசு கடன் வாங்கி இருந்தது. கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை ரூ.2 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு உள்ளது. இந்த கடன் என் மீது, உங்கள் மீது மட்டுமல்ல, நமது பேரக்குழந்தைகளும் பொறுப்பேற்க வேண்டி உள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தட்கல் என்கிற புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் எங்குமே மின்சாரம் கிடையாது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. குறிப்பாக டெல்டா பாசன நிலங்களில் பகலில் 3 மணிநேரமும், இரவில் 3 மணிநேரமும் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. ஆனால் அமைச்சர்களோ மின்மிகை மாநிலம் என்று கூறி வருகிறார்கள். இந்த தட்கல் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மின் இணைப்பு வழங்கப்படுமா? என்பது சந்தேகம்தான். இந்த திட்டம் மூலம் நூதன கொள்ளையடிக்கப்படுகிறது.
தி.மு.க.வுக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார். தி.மு.க.வினர் எங்கள் மீதுதான் வழக்கு தொடருகிறார்கள். அவ்வாறு தொடரப்பட்ட வழக்கில்தான் எனது அக்காள் சசிகலா சிறையில் இருக்கிறார். ஜெயக்குமாரை அமைச்சராக ஜெயலலிதா அமர்த்தியபோதே அவருக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. காற்றுப்போன பலூனாக மாறிவிட்டார். இதேபோல் கலைராஜன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். கடலில் மூழ்கும் கப்பலை போல எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு இருக்கிறது.
வருகிற 22–ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவதாக அறிவித்து இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது. எனவே அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் யாரையும் கட்டுப்படுத்தாது.
இவ்வாறு திவாகரன் கூறினார்.