விவசாய பணிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


விவசாய பணிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Sept 2017 3:45 AM IST (Updated: 1 Sept 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

விவசாய பணிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, வேளாண்மை இணை இயக்குனர் ராஜகோபால், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அருணாச்சலம் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:-

துரைமாணிக்கம்(விவசாயி):-பயிர் காப்பீடு தொகை மிகவும் குறைவாக உள்ளது. பிற மாவட்டங்களில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் தேவையான உரங்கள் இருப்பு இல்லை.

ராமதீர்த்தார்(விவசாயி):- பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்குவதில் மாவட்டம் முழுவதும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. அரசு மருத்துவ கல்லூரிக்கு புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மாற்றப்பட்டதன் காரணமாக நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
காப்பீட்டு அலுவலர் சந்திரசேகரன்:- வருவாய் கிராமங்களின் கணக்கெடுப்பின்படி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் வருவாய்த்துறை ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறது. விரைவில் பயிர் காப்பீடு தொகை வழங்கப்படும் என்றார்.

கலெக்டர் கணேஷ்:- பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்குவதில் ஏற்றத்தாழ்வு இருந்தால் எழுத்துப் பூர்வமாக மனு கொடுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு, விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மட்டும் பேச வேண்டும். மருத்துவமனை மாற்றியது தொடர்பாக திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தனியாக மனு கொடுங்கள்.

பவுன்ராஜ்(விவசாயி):- கொடுத்த மனுவை காணவில்லை என மட்டங்கால் தொடக்க வேளாண்மை வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். கலெக்டரிடம் கொடுத்த மனு என்னவாயிற்று. இதனால் மேலும் கடன் வாங்க முடியவில்லை. கந்தர்வகோட்டை பகுதியில் சிறு பயிர்கள் உற்பத்தியானாலும் அதனை சந்தைப்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் கந்தர்வகோட்டையில் தனி அலுவலகம் தொடங்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.

செல்லத்துரை(விவசாயி):-. காவிரி டெல்டா பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்குவதுபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
மேலும் பல விவசாயிகள் தங்கள் தரப்பு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

Next Story