அ.தி.மு.க. அணிகளை சேர்ந்த 2 மாவட்ட செயலாளர்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு


அ.தி.மு.க. அணிகளை சேர்ந்த 2 மாவட்ட செயலாளர்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Sept 2017 4:30 AM IST (Updated: 1 Sept 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று ஒரே நேரத்தில் அ.தி.மு.க. 2 அணி மாவட்ட செயலாளர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

ஜெயலலிதா இறந்ததும் முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனி அணியாக செயல்பட தொடங்கினார். சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.(அம்மா)அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு மாவட்ட செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார். இதைப்போல புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக பரணி கார்த்திகேயனை நியமனம் செய்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று தினகரனால் அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வைரமுத்து, நகர செயலாளர் பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகளும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

அ.தி.மு.க.வை சேர்ந்த 2 அணி மாவட்ட செயலாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒரே நேரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

முதலில் மாவட்ட செயலாளர் வைரமுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜை சந்தித்து விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை(அதாவது இன்று) மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக நாங்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளோம். இதற்கு அனுமதி வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜை சந்திக்க வந்தேன் என்றார்.

இந்நிலையில், பரணி கார்த்திகேயன் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி தலைமையில், அண்ணாசிலை மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மதுரை ஐகோர்ட்டு கிளையில் அனுமதி வாங்கி உள்ளேன். நாளை(இன்று) எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணாசிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து கொண்டு இருந்தேன். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தொண்டர்களின் எழுச்சியை கண்டு பயந்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து ஆகியோர் குறுக்கு வழியில் அரசாங்கம் மற்றும் அரசு அதிகாரிகளை பயன்படுத்தி 144 தடை உத்தரவு பிறப்பித்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன். மேலும் தினகரனிடம் அனுமதி பெற்று விரைவில் மாலை அணிவிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்துவோம் என்றார்.

Next Story